கோவையில் ரயில்கள் மீதான மூன்று கல் வீச்சு குற்றங்களில் ஏழு சிறார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ள நிலையில், ரயில் வழித் தடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சேலம் ரயில்வே கோட்டத்தின் கீழ் கோவை, வடகோவை, போத்தனூர், திருப்பூர் உட்பட 93 ரயில் நிலையங்கள் உள்ளன. சமீபகாலமாக இருகூர் – போத்தனூர், கோவை – வட கோவை, சிங்காநல்லூர் நிலையங்களில் இடையேயான வழித்தடத்தில் கல்வீச்சு சம்பவங்கள் நடக்கின்றன.

இந்த ஆண்டில் கோவை – இருகூர் இடைப்பட்ட ஒண்டிப்புதூர் ரயில் தண்டவாளம் அருகே சிறுவர் ஒருவர், கோவை வடகோவை இடையே ப்ரூக்ஃபீல்டு பின்புறம் ஒரு சம்பவத்தில் நான்கு சிறுவர்கள், மற்றொரு சம்பவத்தில் இரு ரயில்கள் மீது கல்வீசி உள்ளனர்.

மூன்று சம்பவங்களில் வந்தே பாரத் ரயில் கண்ணாடி, ரயில் இன்ஜின் லைட் உடைந்தது. சரக்கு ரயில் மீது கல் வீசப்பட்டுள்ளது. ஏழு சிறுவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுக்கு பின் அவர்கள் சிறுவர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ரயில் மீது கல் வீச்சு என்பது மனித உயிருக்கும், ரயில்வே பாதுகாப்புக்கும் விடுக்கப்படும் அச்சுறுத்தல் என்பதால் ரயில்வே பாதுகாப்பு படையினர் ஆர்.பி.எப் இந்த வழித்தடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கவனக் குறைவாக இருந்ததற்காக அல்லது குற்றத்திற்கு தூண்டுகோலாக இருந்ததற்காக பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் பொறுப்பாக்கப்படுவார்கள். எனவே பெற்றோரையும் எச்சரித்து அனுப்புகிறோம், கல் வீச்சு புகார்கள் 139 என்ற உதவி எண்ணில் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.