தொகுதி மறுவரையறை (‘டீ-லிமிடேஷன்’) தொடர்பாக வரும் ஏப்ரல் 16,17 மற்றும் 18ம் தேதியில் பாராளுமன்றம் சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. இதில் மக்களவை மறு சீரமைப்பு தொடர்பான முக்கிய நடவடிக்கைகள் நிகழ உள்ளது.

இந்த நடவடிக்கையை உடனே செய்யவேண்டிய அவசியம் என்ன? எனவும் 2026 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பின்னர் இதை செய்யலாம் எனவும் இந்தியா கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில் இன்று கோவையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்த போது, இந்த தொகுதி மறுவரையறை நடவடிக்கை என்பது  கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற தென் மாநிலங்களை மிகவும் பாதிக்கும் நடவடிக்கை என விமர்சனம் செய்தார்.

இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, முதலில் மக்களவை மறு சீரமைப்பு மட்டும் செய்யப்படும் என்று மத்திய அரசு தரப்பில் சொல்லப்பட்டது. இதை அப்போதே காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி எதிர்த்தது. அதே காலத்தில் திமுக-வினர் நியாயமான மறுசீரமைப்பு தேவை எனும் முழக்கத்தை எழுப்பினார்கள். ஆனால் இப்போது மக்களவை எண்ணிக்கையை 50% உயர்த்தி அதன் பின்பு மறுசீரமைப்பு செய்யப் போவதாக கூறப்படுவது ஒரு மாயை என விமர்சனம் செய்தார்.

வெறும் மறு சிறுமைப்பை செய்திருந்தால் தமிழ்நாட்டில் 39 மக்களவை சீட்டுகள் 32 ஆக குறைந்திருக்கும். இந்தக் குறைப்பு நடவடிக்கை தெளிவாக அனைவருக்கும் தெரியவரும். ஆனால் மத்திய அரசோ இப்போது மக்களவை எண்ணிக்கையை 50% கூட்டி பிறகு மறுசீரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்க உள்ளது. இது ஒரு ஏமாற்று வேலை என கூறினார்.

இந்த நடவடிக்கையால் 39 சீட்டுகள் முதலில் 58 ஆக மாறும் அதன் பின்னர் மறுசீரமைப்பு செய்யும் போது 58 சீட்டுகள் 46 ஆக குறையும். 39 சீட்டுகள் 46 ஆக தானே மாறியுள்ளது என மக்கள் நினைப்பார்கள் என மத்திய அரசு எண்ணுகிறது ஆனால் இது ஒரு மாயை என்பது நமது மக்களுக்கு தெரியும் என சிதம்பரம் கருத்து தெரிவித்தார்.

தொகுதி மறுவரையறை நடவடிக்கை மூலம் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் இறுதியில் சீட்டுகள் குறையாமல் உயர்ந்தே காணப்படும், அதுவும் இப்போது 80 ஆக உள்ளது 140 ஆக உயரலாம் என எண்ணுவதாக கூறிய சிதம்பரம், இந்த நடவடிக்கை தென் மாநிலங்களை தன மிகவும் பாதிக்கபோகிறது என்றார்.

மக்களவையில் தமிழ்நாடு,கேரளா,கர்நாடகா, ஆந்திரா,தெலுங்கானாவின் மொத்த வாக்கு பலம் 24.3% மாக உள்ளது. இது 20.7%  ஆக குறையும், இதனால் தென் மாநிலங்களின் குரல் மேலும் ஒடுக்கப்படும் என அவர் கூறினார்.

சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் தமிழகம் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என்பதற்காக இப்போது பாராளுமன்றத்தை அவசரமாக கூடுகின்றனர். தேர்தல் வேலையை ஒதுக்கி விட்டு டெல்லி வரவேண்டும் என்ற நிலை உருவாகி இருப்பது ஒரு திட்டமிட்ட சதி என சிதம்பரம் விளாசினார்.

தமிழகத்திலும் மேற்கு வங்கத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரப் பணிகளை முடக்கும் விதத்தில் நாடாளுமன்றம் கூட்டப்படுகிறது என விமர்சித்த சிதம்பரம், இதற்கு பதில் ஏப்ரல் 29ஆம் தேதி கூட்டலாமே என கேள்வி எழுப்பினார்.

தொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்த்து வாக்களிப்பதை குறைத்தால், இந்த திருத்த மசோதாவை நிறைவேற்றி விடலாம் என்று பாஜக தலைமையிலான மத்திய அரசு நினைப்பது நடைபெறாது என அவர் அடித்து கூறினார்.