2011 விரிவாக்கத்திற்கு முன்னர் கோவை மாநகராட்சியில் இருந்த பழைய 60 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரம் இடைநில்லா குடிநீர் விநியோகிக்கும் திட்டம் கொண்டுவர அப்போதைய அதிமுக அரசு முடிவு செய்தது. 2018 இறுதியில் இதற்கான பணிகள் துவங்கின. கோவிட்-19 போன்ற சில தவிர்க்கமுடியாத காரணத்தால் தாமதமான இந்த பணிகள், இப்போது வரை நடைபெற்று வருகிறது.
24/7 குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும் வார்டுகள்
1.5 லட்சம் வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு இடைநில்லா குடிநீர் வழங்கும் நோக்கில் துவங்கப்பட்ட இந்த திட்டம், கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டலத்தில் 11 வார்டுகள் (வார்டு எண். 3, 12, 18, 19, 20, 25, 26, 27, 28, 29, 30); தெற்கு மண்டலத்தில் 6 வார்டுகள் (வார்டு எண். 76, 77, 78, 79, 86, 87), மேற்கு மண்டலத்தில் 10 வார்டுகள் ( வார்டு எண் . 41, 42, 43, 44, 45, 71, 72, 73,74, 75), மத்திய மண்டலத்தில் 20 வார்டுகள் (வார்டு எண். 31, 32, 46, 47, 48, 49, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 80, 81, 82, 83, 84) மற்றும் கிழக்கு மண்டலத்தில் 13 வார்டுகளில் (வார்டு எண். 24, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61) செயல்படுத்தப்பட்டுள்ளது.
எப்போது தான் நிறைவேறும்?
திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் பகுதிகளில் சாலைகள் உடைக்கப்பட்டு குழாய்கள் பதிப்பு நடவடிக்கைகள் நடைபெற்றது. அதன் பின்னர் பல்வேறு பகுதிகளில் சாலைகள் முற்றிலுமாக சீரமைக்கப்படவில்லை.
கோவை மாநகரின் பெரும்பாலான சாலைகளில் அங்கும் இங்கும் குண்டுகுழிகள் இருக்கவே செய்கின்றன. இதனால் வாகன ஓட்டிகளின் இயல்பு பயணம், குறிப்பாக மழைநாட்களில், பெரும் சிரமத்துக்குளாகி வருகிறது. எப்போது தான் இந்த திட்டம் நிறைவேறும் என மக்கள் எதிர்பார்த்துவரும் நிலையில், எப்படியும் டிசம்பர் 2026ல் 24×7 இடைநில்லா குடிநீர் திட்டத்தை முடித்துவிடுவோம் என்கிறது கோவை மாநகராட்சி வட்டாரங்கள்.
மொத்த திட்டத்தில் 95% பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. 1.5 லட்சத்துக்கும் அதிகமான வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு இடைநில்லா குடிநீர் இணைப்பு தந்தாயிற்று. திட்டத்தின் கீழ் வரும் 34 மேல்நிலை தொட்டிகளில் 33 கட்டப்பட்டு விட்டன. அவிநாசி சாலையில் மட்டும் 1 கிலோமீட்டருக்கு குழாய் பதிய வேண்டும்.
டிசம்பரில் பணிகளை முடிக்க திட்டமிட்டு பணிகள் வேகப்படுத்தப்பட்டு வருகின்றன. திட்டத்திற்காக உடைக்கப்பட்ட சாலைகள் (மாநகராட்சியின் கீழ், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் கீழ் வரும் சாலைகள்) சரி செய்யப்பட்டு வருகின்றன.

