தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் 10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, சான்றிதழ், விருது வழங்கப்படும். அந்த வகையில், கல்வி விருது வழங்கும் விழா தற்போது 3வது வருடமாக நடக்கிறது.

கடந்த மே 30ம் தேதி முதற்கட்டமாக தமிழகத்தில் 18 மாவட்டங்களை சேர்ந்த 88 தொகுதிகளில் 600 மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கி தவெக தலைவர் விஜய் கவுரவித்தார். இதில், “வரும் 2026 தேர்தலில் வண்டி வண்டியாக காசை இறைக்கப்போகிறார்கள். அது உங்களிடம் இருந்து எடுக்கப்பட்ட பணம். எனவே, என்ன செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு தெரியும்” என அதிரடியாக பேசியிருந்தார்.

இந்நிலையில், தவெக சார்பில் 2ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில்  இன்று நடைபெற்று வருகிறது. இதில் 10, 12ம் வகுப்பு பொது தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த 84 தொகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு ஊக்கத்தொகை, சான்றிதழை விஜய் வழங்கி வருகிறார்.

இதில் ராமநாதபுரம், ஈரோடு, கரூர், தஞ்சாவூர், தர்மபுரி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவாரூர், மயிலாடுதுறை, விருதுநகர் மற்றும் புதுச்சேரி பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 2ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள், தற்போது உயர் கல்விக்காக கல்லூரியில் சேர உள்ளனர். அதேவேளையில் 10ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு 11ம் வகுப்பு தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று நடைபெறும் கல்வி விருது வழங்கும் விழாவில், 10ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு விடுப்பு எடுத்து கலந்துகொண்டுள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து அவர்கள் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

விழாவில் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஊக்கத்தொகை வழங்குவது நல்ல செயல் தான். ஆனால் பள்ளி வேலை நாட்களில் இதுபோன்ற விழாவை நடத்தினால், மாணவர்கள் விடுப்பு எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். முதல்கட்ட விழா பள்ளி திறப்புக்கு முன்னர் தான் நடைபெற்றது. இதனால் எந்த பாதிப்பும் இல்லை. சனி, ஞாயிறு போன்ற பள்ளி விடுமுறை நாட்களில் கூட இதுபோன்ற நிகழ்வுகளை நடத்தலாம் என்பதே கல்வி ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.