பழங்குடியின பெண்களை வரி செலுத்துவோர்களாக ஈஷா உயர்த்தியுள்ளது. இது வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய வழி வகுக்கும் முன்னெடுப்பு என மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜூவல் ஓரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கோவை ஈஷா யோக மையத்திற்கு நேற்று மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் ஜூவல் ஓரம் வருகை புரிந்தார். அப்போது, ஈஷாவைச் சுற்றியுள்ள பழங்குடியின மக்களுடன் கலந்துரையாடிய பிறகு அவர் இவ்வாறு கூறினார்.
ஈஷாவின் வழிகாட்டுதலின் கீழ் 2018ம் ஆண்டில், தானிக்கண்டி பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் ஒன்றிணைந்து, நபருக்கு வெறும் 200 ரூபாய் முதலீட்டில் ‘செல்லமாரியம்மன் சுய உதவிக் குழுவை’ உருவாக்கினர். இந்த சுய உதவிக்குழு மூலம் ஆதியோகி வளாகத்தில் சிறிய கடையை நடத்தத் தொடங்கினர். மிகச்சிறிய முதலீட்டில் துவங்கிய அவர்களின் கடை இன்று 1 கோடிக்கும் மேல் வர்த்தகம் செய்யும் நிறுவனமாக வளர்ந்துள்ளது.
இந்த பழங்குடியினப் பெண்கள் சுய தொழில்முனைவோர்களாக உருவெடுத்து, பெருமையுடன் வரி செலுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளனர். ஈஷாவின் பிற கிராமப்புற, பழங்குடி நலப் பணிகள் குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்த அமைச்சர், ஈஷாவிற்கு அருகிலுள்ள பழங்குடி கிராமத்திற்கு சென்று கிராம மக்களுடன் உரையாடினார்.
இதன் பின்பு பேசிய அமைச்சர், “கிராமப்புற மேம்பாடு, கல்வி, சுகாதாரம், ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாத்தல் உள்ளிட்ட ஈஷாவின் பணிகள் பாராட்டத்தக்கவை. நான் பார்வையிட்ட கிராமத்தின் வளர்ச்சியில், ஈஷா முக்கிய பங்கு வகித்துள்ளது. பழங்குடியின மக்கள் ஈஷாவுடன் இணைந்து இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
ஈஷா அறக்கட்டளையின் உதவியால் பழங்குடியினப் பெண்களின் வாழ்வாதாரம் உயர்ந்து, தற்போது வரி செலுத்துகிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற முன்னெடுப்புகள் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய வழி வகுக்கும்.” எனக் கூறினார்.