அறுவடை காலத்தில் தரமான தக்காளியின் பண்ணை விலை கிலோவுக்கு 30 ரூபாய் வரை இருக்கும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கணித்துள்ளது.

இந்தியாவின் மிக முக்கியமான காய்கறிப் பயிர்களில் தக்காளியும் ஒன்றாகும். இது நாட்டின் மொத்த காய்கறி உற்பத்தியில் சுமார் 9.5 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. உலக அளவில் தக்காளி உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதுடன், உலக உற்பத்தியில் சுமார் 11 சதவீத பங்களிப்பை வழங்குகிறது.

இந்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் இரண்டாவது முன்மதிப்பீட்டின்படி (2025-2026), இந்தியாவில் சுமார் 8.34 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது, இதன் உற்பத்தி சுமார் 214.61 லட்சம் டன்களாக உள்ளது. மத்தியப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, குஜராத், ஒடிசா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகியவை தக்காளியை அதிகளவில் உற்பத்தி செய்யும் மாநிலங்களாகும்.

தமிழ்நாடு, இந்தியாவின் மொத்த தக்காளி சாகுபடி பரப்பளவில் சுமார் ஐந்து சதவீத பங்களிப்பை வழங்குகிறது. இங்கு சுமார் 0.38 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் தக்காளி பயிரிடப்பட்டு, சுமார் 12.18 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் தமிழ்நாட்டில் தக்காளி உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

உள்ளூர் சாகுபடி, தக்காளியின் தேவையைப் பூர்த்தி செய்வதில் கணிசமான பங்களிப்பை வழங்கினாலும், அண்டை மாநிலங்களான ஆந்திரப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவிலிருந்து வரும் வரத்து, தமிழ்நாட்டின் தேவையைப் பூர்த்தி செய்ய உதவுகிறது. தற்போது, ஒட்டன்சத்திரம் சந்தையானது அருகிலுள்ள கிராமங்களிலிருந்து தக்காளியைப் பெறுவதுடன், கர்நாடகாவிலிருந்தும் தொடர்ந்து வரத்தைப் பெறுகிறது. அதே சமயம், ஒட்டன்சத்திரம் சந்தை வழியாக உபரி தக்காளி கேரளாவுக்கு அனுப்பப்படுகிறது. இது அதிகப்படியான வரத்தைச் சமநிலைப்படுத்தி, சந்தையில் தக்காளி கிடைப்பதை உறுதி செய்ய உதவுகிறது.

இந்தச் சூழலில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் வேளாண் பொருளியல் துறையின் கீழ் இயங்கும், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை நுண்ணறிவுப் பிரிவு, ஒட்டன்சத்திரம் சந்தையில் கடந்த 15 ஆண்டுகளில் நிலவிய தக்காளி விலைகளை ஆய்வு செய்துள்ளது.

இந்த ஆய்வின் முடிவுகளின்படி, அறுவடை காலத்தில் தரமான தக்காளியின் பண்ணை விலை கிலோவுக்கு 30 ரூபாய் வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வணிக வட்டாரங்களின் தகவல்படி, அறுவடை காலத்தில் மழை பெய்தாலோ அல்லது பிற மாநிலங்களிலிருந்து அதிக அளவில் தக்காளி வரத்து இருந்தாலோ, அது உள்ளூர் சந்தை விலையைப் பாதிக்கக்கூடும்.