2024 மக்களவை தேர்தலின் போது, கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியை அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு வழங்கியது.
இந்த தேர்தலின் முடிவில் கோவை உட்பட தமிழகத்தில் இருந்த 39 மக்களவை தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. இதன் பின்னர் கோவைக்கு வழங்கப்பட்ட பிரத்தியேக வாக்குறுதியான இந்த கிரிக்கெட் மைதானம் தொடர்பான முதல் கட்ட பணிகள் நடைபெற்றன.
கிரிக்கெட் மைதானத்தை கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள திறந்த வெளி சிறைச்சாலை வளாகத்தில் அமைக்கலாம் என்று ஆலோசிக்கப்பட்டு அந்த நிலம் தேர்வானது. சுமார் 20 ஏக்கர் நிலத்தில் கிரிக்கெட் மைதானமும் 10 ஏக்கர் நிலத்தில் வணிக வளாகமும் அமையும் என்று திட்டமிடப்பட்டு அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்ற வந்தன.
அப்போதைய துணை முதலமைச்சரும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இத்திட்டத்தின் மேல் சிறப்பு கவனம் செலுத்தி வந்தார். கிரிக்கெட் மைதானத்திற்கான வடிவமைப்புகள், வரைபடங்கள் இறுதிசெய்யப்படும் நிலைக்கு சென்றன. இந்த நிலையில் ஆட்சி மாற்றத்திற்குப் பின்பு இந்த திட்டம் மறுபரிசீலனை நிலையில் உள்ளது.
சமீபத்தில் கோவை வந்த விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கோவை கிரிக்கெட் ஸ்டேடியம் தொடர்பான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன எனவும், இதுகுறித்து உரிய வல்லுநர்கள் அனுமதியுடன் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அண்மையில் கோவை தொழில்துறையினருடன் கோவையின் வளர்ச்சி குறித்து பல்வேறு திட்டங்கள் மற்றும் தேவைகள் பற்றி ஆலோசனை நடத்திய கோவை அமைச்சர்கள் விக்னேஷ் மற்றும் சம்பத் ஆகியோரிடம் இதுகுறித்து சில கோரிக்கைகள் தொழில்துறையினரால் முன்வைக்கப்பட்டன.
அதாவது, கோவை ஒண்டிப்புதூரில் அமைய இருந்த இந்த விளையாட்டு மைதானத் திட்டத்தை அவசியம் மறுபரிசீலனை செய்ய வேண்டும், அதற்கான சாலை வசதிகள் சரியாக இருக்கிறதா, மருத்துவம் போன்ற அத்தியாவசிய வசதிகள் உள்பட எல்லா வகையிலும் திட்டத்துக்கு தேர்வான இடம் மக்களுக்கு உகந்ததாக இருக்க வேண்டும். எனவே, இதற்கான இடத்தேர்வு குறித்து மறுபரிசீலனை வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
