கோவையில் கே.ஜி. மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை கருவி ஒன்றின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் சிவக்குமார், நடிகர் சத்யராஜ் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் துவக்கத்தில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டு, பின்னர் தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டது. இது தொடர்பாக சத்யராஜ் அனைவரிடத்திலும் ஒரு வேண்டுகோளை வைத்தார்.
“தமிழ் நாட்டிற்குள் நடக்கும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் முதலில் தமிழ் தாய் வாழ்த்தை பாடிவிட்டு அதன் பின்னர் வேறு எந்த வாழ்த்து பாடலாக இருந்தாலும் பாடலாம். இது எனது சிறு வேண்டுகோள், இதை யாரும் தவறாக எடுக்கவேண்டாம்”, என இந்த நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தனக்கும், கே.ஜி.க்கும் உண்டான உறவை பற்றி பகிர்ந்து கொண்டார்.
தான் கோவையில் கவர்ன்மென்ட் ஆர்ட்ஸ் கல்லூரியில் பயின்ற நாட்களில் கே.ஜி. மருத்துவமனை மற்றும் கே.ஜி. காம்ப்ளெக்ஸ் வழியாக தான் செல்லும் வழக்கம் இருந்ததாகவும் பகிர்ந்துகொண்டார். தான் கே.ஜி ஹாஸ்பிடல் உடன் சேர்ந்து வளர்ந்தவன் எனவும், இதை தனியாக பிரித்துப் பார்க்க முடியாது என கூறிய அவர், தன்னுடைய பார்வையில் இருந்து ஆரோக்கியம் பற்றி ஒரு எளிமையான கருத்தை பகிர்ந்துகொண்டார்
“ஒன்று நமக்கு நல்ல நகைச்சுவை உணர்வு இருக்க வேண்டும் அல்லது யாராவது நன்றாக நகைச்சுவை செய்தால் சிரிக்கவாவது செய்ய வேண்டும். இந்த இரண்டுமே டாக்டர் பக்தவச்சலத்திற்கும், நடிகர் சிவகுமாருக்கும் நன்றாக வரும்,” என வேடிக்கையாக பேசினார்.
ஒரு மனிதனுக்கு எப்போது வேண்டுமானாலும் எந்த வியாதி வேண்டாமானாலும் வரலாம். எனவே இருக்கும் வரை சந்தோஷமாக இருக்க வேண்டும். இன்றைய நாளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பது முக்கியம் என அவர் பேசினார்.

