தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்று 110 நாட்களிலேயே சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்காது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: தற்போது தமிழக சட்டமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகள் சினிமாவில் சட்டமன்ற காட்சி எப்படி இருக்குமோ, அதுபோலத்தான் இருக்கிறது.
சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்தால்தான், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்களது தொகுதி பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது மக்களுக்கு தெரியவரும். சில அமைச்சர்கள் மட்டுமே கேள்விகளுக்கு பதில் அளிப்பதாகவும், அந்தந்த துறைகளுக்கான கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களே பதில் அளிக்க வேண்டும்.
சபாநாயகர் தற்போது 10 மணி நேரம் சட்டமன்றத்தை நடத்துவதாகவும், அடுத்து 24 மணி நேரம் நடத்தினாலும் நடத்துவார் போல தெரிகிறது. சட்டமன்றத்தை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும்.
நாளை மறுநாள் காவல்துறை மானியக் கோரிக்கை நடைபெற உள்ளது. அப்போது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து பேச உள்ளேன். சட்டம் ஒழுங்கு தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். அதற்கு அரசு என்ன பதில் அளிக்கிறது என்பதை பார்ப்போம்.
தமிழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 110 நாட்களே ஆகியுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, போதைப்பொருள் நடமாட்டம், பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
தமிழகத்திற்கு ஏற்கனவே அதிக அளவில் கடன் இருப்பது அனைவருக்கும் தெரியும். தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிடுவதால் அதற்கேற்ப கடன் வாங்க வேண்டிய நிலை ஏற்படும். இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடித்தால் 10 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் வாங்கும் நிலை ஏற்படலாம்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் மேட்டூர் அணையை திறந்து வைத்ததாகவும், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அதே முறையை பின்பற்றியதாகவும் தெரிவித்தார். தற்போது முதலமைச்சர் தனி விமானத்தில் வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “அவர் காஸ்ட்லி முதலமைச்சர்; நாங்கள் விவசாயி. எனது நிலை வேறு, அவரது நிலை வேறு” என எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.
“அடுத்த பிரதமர் விஜய்” என்ற பரப்புரை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, விஜய் இந்தியாவின் பிரதமராகலாம், குடியரசுத் தலைவராகலாம், ஏன் அமெரிக்க அதிபராக கூட ஆகலாம் என்றும், அது அவருடைய விருப்பம்.
இந்திய கூட்டணியில் அதிமுக தொடர்ந்து இருப்பதாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, உள்ளாட்சித் தேர்தல் வரும்போது அதுகுறித்து பார்க்கலாம் என்றார். மக்கள் தொகை கணக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருவதாகவும், அதன்பின்னர் தொகுதி மறுவரையறை உள்ளிட்ட பணிகள் நடைபெற வேண்டியிருப்பதால் உள்ளாட்சித் தேர்தல் வருவதற்கு இன்னும் காலம் ஆகும் என்றும் தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழக அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது என்பது அவர்களது செயல்பாடுகளை வைத்தே தெரிகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
