கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் (Waste-to-Energy) திட்டத்திற்கான டெண்டர் செயல்முறை வரும் அக்டோபர் 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கு பகுதியில் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையிலும் இத்திட்டத்தை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தன.

இதன்படி, கோவை மற்றும் திருப்பூர் மாநகராட்சிகளில் நாள்தோறும் சேகரமாகும் சுமார் 1,200 டன் அளவிலான கழிவுகளை வெள்ளலூர் ஆலைக்குக் கொண்டு வந்து, அறிவியல் பூர்வமாக மேலாண்மை செய்து சுமார் 20 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், வெள்ளலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்கள் இந்த திட்டத்திற்குச் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரக் காரணங்களை முன்வைத்துத் தொடர் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். மக்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த பின்னரே அடுத்தகட்ட முடிவு எட்டப்படும் எனக் கூறப்பட்டு, டெண்டர் நடைமுறைகள் ஏற்கனவே தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலை அமைப்பதற்கான சர்வதேச அளவிலான டெண்டர் சமர்ப்பிக்கும் கடைசி நாள் தற்போது அதிகாரப்பூர்வமாக அக்டோபர் 30ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்துக்களை முழுமையாகக் கேட்டறிந்து பரிசீலிக்கும் வகையிலும், நிர்வாக நடைமுறைகள் காரணமாகவும் இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.