ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் ”மின்னல் 2025” நிகழ்ச்சி நடைபெற்றது. ஆதரவற்ற இல்லக் குழந்தைகளுக்காக வருடந்தோறும் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், கோவையில் உள்ள பல ஆதரவற்றோர் இல்லங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பாரதியார் பல்கலைக்கழக இளைஞர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர் பிரேமசுதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, குழந்தைகளின் திறமைகளை பாராட்டி வாழ்த்தினார். கல்லூரியின் முதல்வர் சித்ரா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், குழந்தைகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தக் கூடிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சி குறித்து கல்லூரி முதல்வர் சித்ரா கூறுகையில்,”எங்கள் கல்லூரியில் கடந்த இருபது ஆண்டுகளாக மின்னல் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாணவிகள் சமூகப் பொறுப்பை உணர வேண்டும், மக்களின் நிலைமையை புரிந்து கொண்டு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பதே இதன் நோக்கம். வெவ்வேறு இடங்களில் இருந்து குழந்தைகள் எங்கள் கல்லூரிக்கு வருவதில் எங்களுக்கும் பெருமை மற்றும் மகிழ்ச்சி” என்று பகிர்ந்து கொண்டார்.