கோவை மாநகரில் வெயில் கடந்த 1 மாத காலமாகவே கொளுத்தி வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கோவையின் முக்கிய சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் சிக்னலில் நிற்கும் போது, வெயிலில் வாடாமல் இருக்க பச்சை பந்தல்கள் மாநகராட்சி சார்பில் நிறுவப்பட்டு வந்தது.
மரத்தின் அருமை நிழலில் தெரியும் என்பார்கள். அது போல, இந்த பச்சை பந்தலின் அருமை உணர்ந்த வாகன ஓட்டிகள் பலரும் “ஏன் இந்த பந்தல்கள் இம்முறை கோவை மாநகரின் வெவ்வேறு சிக்னல்கள் அருகே நிறுவப்படவில்லை ?” என கேள்வி எழுப்புகின்றனர்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இவ்வாறு பந்தல்கள் நிறுவப்படாமல் சென்று இருக்கலாம் என்றாலும், மார்ச் 15ல் தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பாகவே இதை செய்திருந்தால் கூட பயன் பெற்றிருக்க முடியமே என புலம்புகின்றனர் வாகனஓட்டிகள்.
“தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்பதால் முன்கூட்டியே 3 மாத மகளிர் உரிமைத்தொகையை வங்கி கணக்குகளில் அரசு வரவு வைத்தது. இதை தவிர கோடைகால சிறப்பு தொகுப்பாக ரூ.2000 வழங்கப்பட்டது. தமிழக அரசு முன்னெச்சரிக்கையாக செயல்பட்டதை பார்த்தாவது, மாநகராட்சி முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டிருக்கலாம்,” என காந்திபுரம் சிக்னலில் வெயிலால் வாடிய வாகன ஒட்டி ஒருவர் கருத்து தெரிவித்தார்.

