சபரிமலை சீசனை முன்னிட்டு, ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் வரை போத்தனூர் வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் சேவை நவம்பர் 19 முதல் 2027 ஜனவரி 21 வரை இயக்கப்படும் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: காக்கிநாடா டவுனில் இருந்து வியாழக்கிழமைகளில் காலை 8.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணிக்கு கொல்லம் சென்றடையும். இந்த சேவை நவம்பர் 19 முதல் 2027 ஜனவரி 21 வரை இயக்கப்படும்.

மறுமார்க்கமாக, கொல்லத்தில் இருந்து சனிக்கிழமைகளில் பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு காக்கிநாடா சென்றடையும். இந்த ரயில் நவம்பர் 21 முதல் 2027 ஜனவரி 23 வரை இயக்கப்படும்.

இந்த சிறப்பு ரயில்கள் சாஸ்தான்கோட்டா, கருநாகப்பள்ளி, காயன்குளம், மாவேலிக்கரா, செங்கண்ணூர், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எர்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சித்தூர், தர்மாவரம், கூட்டி, குண்டூர், விஜயவாடா, ஏளூரு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.