இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் மூன்று கல்லூரிகள் – இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரி (கோவை), மற்றும் இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி (சேலம்) – ஆகியவை தலா 2.5 கோடி மதிப்பிலான QNX-எவ்ரிவேர் சிறப்பு மையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செப்டம்பர் 17ம் தேதி அன்று ப்ளாக்பெர்ரி QNX-எவ்ரிவேர் மற்றும் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களிடையே கையெழுத்தானது. நிகழ்வில் கல்லூரிகளின் முதல்வர்கள், டீன்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கனடாவை தலைமையிடமாகக் கொண்ட ப்ளாக்பெர்ரி  QNX நிறுவனம் பாதுகாப்பான இயக்க முறைமைகள், ஹைப்பர்வைசர்கள், உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் IoT துறைகளில் உலகளவில் நிபுணத்துவம் பெற்றது. பைஸ்குயர் டெக்னாலஜிஸ் உடன் இணைந்து, இந்நிறுவனம் இந்தியாவில் QNX எவ்ரிவேர் திட்டத்தை துவங்கியுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் தலா 2.5 கோடி மதிப்பிலான மென்பொருள் மற்றும் ஆய்வக கருவிகள் ஆட்டோமேஷன், மருத்துவம், தொழில்துறை மற்றும் ரோபோட்டிக்ஸ் துறைகளில் பயன்படுத்தப்படும் வகையில் அமைக்கப்படுகின்றன. மாணவர்கள் QNX மென்பொருள் மேம்பாட்டு தளம் (QNX SDP) குறித்த பயிற்சியை பெற்று, தொழில் சார்ந்த திறன்களை மேம்படுத்த வாய்ப்பு பெறுகின்றனர்.

மாணவர்களுக்கு தொழில் முனைப்புத் திறன், ஹேக்கத்தான்கள், வடிவமைப்பு போட்டிகள், வேலை வாய்ப்பு பயிற்சி போன்ற பல அம்சங்கள் வாயிலாக உலகளாவிய அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கல்லூரி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் மற்றும் இணை செயலாளர்  பிரியா சதீஷ் பிரபு ஆகியோர், QNX-எவ்ரிவேர் திட்டத்தை முன்னெடுத்து வெற்றிகரமாக செயல்படுத்திய முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்களை பாராட்டினர்.