பி.எஸ்.ஜி. செவிலியர் கல்லூரியில், ‘ஜெனித்’ என்ற தலைப்பில் மாநிலங்களுக்கு இடையேயான செவிலியர் கல்லூரிகளுக்கான வினாடி-வினா போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில் 22 கல்லூரிகளைச் சேர்ந்த 134 மாணவர்கள் பங்கேற்றனர். முதற்கட்ட எழுத்துத் தேர்வில் பல்வேறு செவிலியர் துறைகளை உள்ளடக்கிய வினாக்கள் கேட்கப்பட்டன. இதில் முதல் ஐந்து அணிகள் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றன.
பொதுஅறிவு, சூழ்நிலை அடிப்படையிலான கேள்விகள், மருந்தியல் மற்றும் கணக்கீடு, காட்சி அடிப்படையிலான வினாக்கள், சுருக்கெழுத்து வினாக்கள், அதி விரைவு வினாக்கள் உள்ளிட்ட பல்வேறு சுற்றுகளைக் கொண்ட வினாடி-வினா போட்டி நடைபெற்றது.
போட்டியில், முதல் மற்றும் இரண்டாம் பரிசுகளை செவிலியர் கல்லூரி, மதுரை மருத்துவ கல்லூரி வென்றது. மூன்றாம் பரிசை கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி பெற்றது.
நிகழ்ச்சிக்கு பி.எஸ்.ஜி. செவிலியர் கல்லூரியின் முதல்வர் ஜெயதீபா வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சமூக மருத்துவத் துறைத்தலைவர் இயக்குநர் டாக்டர் சுதா ராமலிங்கம் கலந்து கொண்டார்.
நடுவர்களாக ஸ்ரீ ராமகிருஷ்ணா பாராமெடிக்கல் அறிவியல் கல்லூரியின் முதல்வர் கிரிஜா குமாரி பி.எஸ்.ஜி. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் மகப்பேறு மற்றும் மகளிர் நல செவிலியத் துறைத் தலைவர் மகேஸ்வரி பங்கேற்றனர்.
