பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்டக் குழு சார்பில் ஜூன் 08 சனிக்கிழமை அன்று கோவை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் ஜெ.உஷா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமான பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், சமையல் எரிவாயு மற்றும் வணிக எரிவாயு விலையை குறைக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

மேலும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தின் மூலம் கோரிக்கை விடுத்தனர்.

மாதர் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் திரளாக கலந்து கொண்டு இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியும் ஒப்பாரி வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் மாநில குழு உறுப்பினர்கள் ராஜலட்சுமி, அமுதா, மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாமன்ற உறுப்பினர்கள் கண்ணகி ஜோதிபாசு, என்.சுமதி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.