கோவை அவிநாசி சாலை நவ இந்தியா பகுதியில் உள்ள கேஎஃப்சி உணவகத்திற்கு சில இளைஞர்கள் பர்கர் வாங்கி உண்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அவர்கள் வாங்கிய பர்கரை சாப்பிடும்போது அதில் புழுக்கள் பல நெழிந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள் உடனடியாக உணவக ஊழியர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பர்கருக்கு பதிலாக மற்றொரு பர்கரை உணவக நிர்வாகம் வழங்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும், சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றம்சாட்டிய இளைஞர்கள், சம்பவம் குறித்து வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.

மேலும், இதுபோன்ற உணவுப் பொருட்களை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பதால் உடல்நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாக உணவகத்தரப்பு விளக்கம் கேட்டபோது உரிய பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.