இரண்டு கல்வி ஆண்டுகளுக்கான மொத்த ஆர்.டி.இ. நிலுவைத் தொகை வழங்கிய தமிழக முதல்வருக்கு தனியார் பள்ளிகளின் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிறுவன தலைவர் அரசகுமார் வெளியிட்ட அறிக்கையில், கட்டாயக் கல்வி சட்டத்தின் படி தமிழகத்திலுள்ள பள்ளிகளில் பயின்று வரும் 25 சதவீத ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்தை மத்திய அரசு 4 ஆண்டுகள் விடுவிக்காமல்  கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு,  2 ஆண்டுகளுக்கு மட்டுமே விடுவித்தது.

அந்த தொகையானது 2021-22 மற்றும் 2022- 23 கல்வி ஆண்டுகளுக்கு மட்டுமே உரியது. ஏழை எளிய மாணவர்களின் கல்வி கற்றல்  பாதிக்கப்படக்கூடாது  என தமிழக முதல்வர் உரிய காலத்தில் மேற்கண்ட இரண்டு கல்வி ஆண்டிற்கு நிதியை, மாநில நிதியிலிருந்து வழங்கி விட்டார்கள்

இந்த நிலையில் 2023- 24, 2024-25 ஆகிய இரண்டு கல்வி ஆண்டுகளுக்கு மத்திய அரசு இன்னும் நிதி ஒதுக்காத நிலையிலும், 2 கல்வி ஆண்டுகளுக்கான மொத்த ஆர்.டி.இ. நிலுவைத் தொகையையும், தமிழக முதல்வர் விடுவித்து இருக்கிறார்.

தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் பள்ளிகளின் சார்பாகவும், ஆர்.டி.இ. மூலம் கல்வி பயின்று வரும் மாணவர்களின் பெற்றோர்கள் சார்பாகவும், நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். வெகுவிரைவில், தமிழ்நாடு தனியார் பள்ளிகளின் சங்கத்தின் சார்பாக நன்றி தெரிவிக்கும் மாநாடு நடத்தப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.