பேரூர் ஆதீனத்தின் 24ம் குருமகாசந்நிதானம் சாந்தலிங்க இராமசாமி அடிகளார் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா, பேரூர் ஆதீன வளாகத்தில் வரும் ஜூன் 23ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாரம்பரிய சிவவேள்வி பூஜை நடைபெறுகிறது.
இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு கோவை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகளார் ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சி குறித்து பேசினர். இவர்களுடன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொள்ளாச்சி பகுதி நிர்வாகி கோபால் உடனிருந்தார்.
பேரூர் ஆதீனம் பேசியதாவது: தன் வாழ்நாள் முழுவதும் சமய சமுதாய மறுமலர்ச்சிக்காக அயராது உழைத்த அடிகள் அவர்களுக்கும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும் இந்த ஆண்டு நூறாவது ஆண்டாக அமைந்துள்ளது. அதையொட்டி இருவருக்குமான நூற்றாண்டு விழா பேரூராதீன வளாகத்தில் ஜூன் 23 அன்று நடைபெறவுள்ளது. இதில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கொள்கிறார்.
காலை 6 மணி முதல் 7:15 மணி வரை தெய்வத்தமிழும் வடமொழியும் ஓதி வேள்விகள் நடத்தப்படும். வேள்வியின் நிறைவாக மோகன் பகவத் சிவலிங்கத்திற்கு அபிஷேக வழிபாடுகளை செய்ய உள்ளார். தொடர்ந்து 11 மணி வரை நடைபெறும் பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள உள்ளார். அனைத்து நிகழ்வுகளிலும் மக்கள் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் எனக் கூறினார்.