விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஒருங்கிணைந்த பண்ணைய முறையை ஊக்குவிக்கவும், ஏபிடி சொசைட்டி மற்றும் ஏபிடி சேவை மையம் தாராபுரம் அருகே உள்ள சந்திராபுரம் கிராமத்தில் தொடங்கப்பட்டது.

இதுகுறித்து சக்தி குழுமங்களின் நிர்வாக இயக்குநர் பாலசுப்ரமணியம் கூறுகையில்: தற்போதைய சூழலில் விவசாயம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வரும் நிலையில், விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து, விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவது காலத்தின் தேவையாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு, நவீன அறிவியல் தொழில்நுட்பங்களுடன் கூடிய ஒருங்கிணைந்த பண்ணைய முறையை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் ஏபிடி சொசைட்டி மற்றும் ஏபிடி சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகள், பயிற்சிகள், மாதிரி பண்ணைகள், தரமான உள்ளீட்டு பொருட்கள் மற்றும் சந்தை சார்ந்த வழிகாட்டுதல்களை வழங்கி, ஆண்டு முழுவதும் நிலையான வருமானத்தை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம். சந்திராபுரத்தை முன்மாதிரி கிராமமாக உருவாக்கி அதன் வெற்றியைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த சேவை மையத்தின் மூலம் காய்கறி சாகுபடி, கரும்பு, மஞ்சள், வாழை உள்ளிட்ட பயிர்கள், கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி, கோழி, ஆடு, மீன், காளான் மற்றும் தேனீ வளர்ப்பு போன்ற பல்வேறு துறைகளில் நவீன அறிவியல் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தி, பயிற்சிகள், மாதிரி பண்ணைகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன.

விழாவிற்கு சக்தி குழுமங்களின் நிர்வாக இயக்குநர் பாலசுப்ரமணியம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் வினோதினி பாலசுப்ரமணியம், சம்யுக்தா சங்கர் வாணவராயர், சுருதி, அம்ரித் விஷ்ணு, விவசாயிகள் கலந்து கொண்டனர்.