கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் அருகே சுமார் ரூ.300 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை, தமிழக முதலமைச்சர் விஜய் நாளை (அக்டோபர் 16)  திறந்து வைக்க உள்ளார்.

கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கப்பட்ட இப்பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன. சுமார் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் 8 தளங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த அறிவுலகத்தில், ஒரே நேரத்தில் ஒரு லட்சம் புத்தகங்களை வைக்கும் வசதியுடன் கூடிய நூலகம், ஆராய்ச்சிப் படிப்பகங்கள், அறிவியல் மையம், குழந்தைகள் நூலகம், டிஜிட்டல் நூலகம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக வசதிகள் இடம்பெற்றுள்ளன.

இதற்காக அக்டோபர் 16ம் தேதி காலை 11 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடையும் முதலமைச்சர் விஜய்க்கு, முக்கியப் பிரமுகர்கள் புத்தகங்கள் வழங்கி வரவேற்பு அளிக்க உள்ளனர். தொடர்ந்து காலை 11.45 மணிக்கு காந்திபுரத்தில் உள்ள விழா நடைபெறும் இடத்திற்குச் செல்லும் அவர், தந்தை பெரியாரின் திருவுருவச் சிலையையும், பெரியார் அறிவுலகக் கல்வெட்டையும் திறந்து வைக்கிறார்.

இதையடுத்து, அறிவுலகத்தின் வரவேற்பறை, அறிவியல் மையம், குழந்தைகள் நூலகம், புத்தக வாசிப்புப் பிரிவு மற்றும் டிஜிட்டல் நூலகம் உள்ளிட்ட வசதிகளை முதலமைச்சர் நேரில் பார்வையிடுகிறார்.

விழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் வரவேற்புரை நிகழ்த்த உள்ளார். தொடர்ந்து, முதலமைச்சருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதன்பின்னர், முடிவுற்ற அரசுத் திட்டங்களைத் திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், 100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி முதலமைச்சர் உரையாற்ற உள்ளார்.

மாவட்ட ஆட்சியரின் நன்றியுரையைத் தொடர்ந்து நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவடைகிறது. பின்னர், மதியம் 1.40 மணியளவில் முதலமைச்சர் கோவை விமான நிலையத்திற்குச் செல்ல உள்ளார்.

முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் மற்றும் மேற்கு மண்டலக் காவல்துறை தலைவர் ரம்யாபாரதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் விழா நடைபெறும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட்டனர். மேலும், அப்பகுதியில் சாலைகளைத் தூய்மைப்படுத்துதல், போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.