2026ம் ஆண்டு என்பது ஸ்மார்ட் போன் பிரியர்களுக்கு மிக ஏமாற்றம் தரும் ஆண்டாக இருந்து வருகிறது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதால்,
ஏ.ஐ. டேட்டா சென்டர்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்களுக்கு ரேம் எனும் பாகம் தேவை. இவை ஸ்மார்ட் போன்களுக்கும் அவசியம்.
AIDATACENTER scaled

ஆனால் இந்த பாகத்தை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளுக்கு லாபம் அதிகம் கிடைக்கும் என்பதால் ரேம் தயாரிப்பின் பெறும் சதவீதத்தை ஏ.ஐ.  நிறுவனங்கள் பக்கம் திருப்பி விட்டுவிட்டன.
RAMLPDR scaled

இதன் காரணத்தால், ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு போதிய ரேம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட, அதை சமாளிக்க ஸ்மார்ட்போன்கள் விலையை 2026 துவக்கம் முதல் அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் கணிசமாக உயர்த்தி வருகின்றன.

இதனால், இந்த ஆண்டு இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் விற்பனை அளவு பெரும் சரிவை சந்தித்துள்ளது. ‘கவுண்டர்பாயிண்ட் ரிசர்ச்’ அமைப்பின் சமீபத்திய அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், முந்தைய ஆண்டைக் காட்டிலும் ஸ்மார்ட்போன் விற்பனை 10 % குறைந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் இந்த குறிப்பிட்ட காலாண்டில் ஏற்பட்ட மிக மோசமான வீழ்ச்சி இதுவாகும்.

மேலும் ரேம் தட்டுப்பாடுக்கு முன்னர் ரூ.10,000 – ரூ.15,000க்குள் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் கணிசமாக விலையுயர்ந்துள்ளன. இதனால் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விலையுயர்வால் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் விற்பனை 45% சரிவை சந்தித்துள்ளது எனவும் தகவல் உள்ளன. பலரும் தங்களின் பழைய ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தவும், ‘செகண்ட்-ஹான்ட்’  சந்தை பக்கம் திருப்புகின்றனர்.
SECONDHAND scaled

இதற்கிடையே தற்போது ஸ்மார்ட்போன் துறை ஆய்வாளர்கள் பலரும் இந்த நிலை 2027 வரை நீடிக்கும் என கணித்துள்ளனர். ரேம் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக உள்ள தென் கொரியாவின் ‘எஸ்.கே. ஹைநிக்ஸ்’ (SK Hynix) 2027ம் ஆண்டு இதை விட மோசமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

உலக அளவில் ஸ்மார்ட்போன் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த தாக்கம் குறைந்த காலத்திற்கான பாதிப்பல்ல. இது மேலும் நீடிக்கும், பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் பிரிவு அடுத்த ஆண்டிலும் சுருங்கிக்கொண்டே செல்லும். 2027ன் இறுதியிலோ அல்லது 2028ன் துவக்கத்திலோ மாற்றத்தை எதிர்பார்க்கலாம் ஆனால் அதற்கு முன்பு வாய்ப்புகள் மிக மிக குறைவு தான் என்கின்றனர் ஆய்வாளர்கள்.