பி.எஸ்.ஜி. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா துறை சார்பில் உலகில் முதல் முறையாக பஞ்சகோசங்களின் அடிப்படையில் முழு உடல் ஆரோக்கியப் பரிசோதனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் புவனேஸ்வரன் தலைமையில், இயற்கை நல மருத்துவர்கள் சுபாஷினி, சுதர்சன், காவியவர்ஷினி, யோகா நிபுணர் டாக்டர் திவ்யா, அலோபதி மருத்துவர்கள் சுவேதா, திணேஷ் நரசிம்மன், அனாதி அறக்கட்டளையின் முதன்மைக் செயல் அதிகாரி கோமதி ஆகியோர் இந்த முழுநல ஆரோக்கிய பரிசோதனை திட்டத்தை உருவாக்கினர்.
இதுகுறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவர்கள் கூறுகையில்: ஆரோக்கிய பரிசோதனை என்பது உடலுக்கான பரிசோதனையாக மட்டுமே உள்ளது. இதை முழு பரிசோதனை என சொல்ல முடியாது. பல நேரங்களில் உடலில் வியாதி தோன்ற புறசூழலைவிட அகசூழலே முக்கிய காரணிமாக அமைகிறது. ஆரோக்கிய பரிசோதனையில் இக்காரணிகளையும் அறிந்து கொண்டால் வாழ்வியல் சார்ந்த நோய்களைத் தடுக்க முடியும்.

பி.எஸ்.ஜி மருத்துவமனையில் பஞ்சகோசங்களின் அடிப்படையில் முழு உடல் ஆரோக்கியப் பரிசோதனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரூ.2900 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
பஞ்சகோசம் என்பது உடல், உயிர்சக்தி, மனம், அறிவுசார் உடல், பேரின்ப உடல் ஆகிய 5 அடுக்குகளைக் கொண்டது. ஒரு நபரின் உடல், உளவியல், ஆன்மீக பரிமாணங்களின் ஒன்றோடொன்றின் தொடர்புள்ளதாக உள்ளது. சீரற்ற சுவாசம், உணர்ச்சி ஏற்றத்தாழ்வுகள், தூக்கத் தொந்தரவுகள் போன்றவை பிராணசக்தி ஓட்டம் தடைபடுவதால் ஏற்படக்கூடும்.
5 கோசங்களும் சமநிலையிலும், ஒருங்கிணைப்பிலும் இருத்தல் நலம். நோய் வருமுன் தடுக்க மட்டுமில்லாமல், சுய முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் என்பதே பஞ்சகோச தத்துவத்தின் அடிப்படை ஆகும்.
இந்தப் பரிசோதனையில் ரத்தப் பரிசோதனை, ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்டவைகளுடன் பஞ்சகோச பரிசோதனை, திரிதோச பகுப்பாய்வும் இடம்பெறும். பஞ்சகோச சமநிலைக்கான ஆலோசனை, இயற்கை நல சிகிச்சையான பாத அழுத்த சிகிச்சை, யோகப் பயிற்சியும் இதில் அடங்கும் என கூறினர்.
