கோவை மாநகராட்சி 21வது வார்டு சங்கரா மருத்துவமனை அருகில் சிவானந்தபுரம், விளாங்குறிச்சி ரோடு, கணபதி மாநகர் சுற்று பகுதிகளில் சுமார் 6,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இந்த மக்களுக்காக 24 லட்சம் லிட்டர் மற்றும் 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மிகப்பெரிய குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளுக்கு இடையில், மாநகராட்சியின் 20 வார்டுகளில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை தரம் பிரிக்கும் மையம் அமைப்பதற்காக கட்டுமான பணிகளுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பணிகள் நடக்கும் பகுதியில் நேற்று மாலை, 21வது வார்டு கவுன்சிலர் பூங்கொடி சோமசுந்தரம் தலைமையில் அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மா.கம்யூ. சார்பில் முதல்வருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: குடிநீர் வழங்கும் மேல்நிலைத் தொட்டிகளுக்கு இடையில் குப்பைத் தரம் பிரிப்பு மையம் அமைப்பது, அவர்களின் அடிப்படை வாழ்வுரிமையை பாதிக்கும். குடிநீர் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும்.

20 வார்டில் ஈ, கொசு, எலி பெருகும். இதன் மூலம் டெங்கு, மலேரியா, சுவாச நோய்கள் உள்ளிட்ட பல்வேறு தொற்றுநோய்கள் பரவும். குடிநீர் ஆதாரம் மாசுபடும் அபாயம் உள்ளது. இதனால் மக்களின் டல்நலம் பாதிக்கப்படும்.

அருகிலேயே மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் குடியிருப்புகள் உள்ளன. இதற்கு நடுவே குப்பை மையம் அமைப்பது ஏற்க முடியாது. எனவே குப்பை தரம் பிரிப்பு மையம் தொடர்பான அனைத்து கட்டுமானப் பணிகளையும் கைவிட வேண்டும். மக்கள், உள்ளாட்சி அமைப்புகளுடன் கலந்தாலோசித்து மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.