வடகிழக்கு பருவமழை கோவை மாநகரப் பகுதிகளில் அதிகளவு பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், மழைநீரை முறையாகச் சேமித்து, நிலத்தடி நீர்வளத்தை மேம்படுத்தும் வகையில், பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில், இன்று முதல் ஒருமாத காலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி, விழிப்புணர்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட செய்தி குறிப்பு: கோவை மாநகராட்சிக்குட்பட்ட 5 மண்டலங்களில் உள்ள 100 வார்டு பகுதிகளில் வீடு வீடாகச் சென்று மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக, சம்மந்தப்பட்ட அலுவலர்கள் பார்வையிட்டு, அதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். வணிக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் இதர அனைத்து பயன்பாட்டுக் கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை முறையாக ஏற்படுத்தி, மேற்கூரைகளில் சேகரமாகும் மழைநீரை வீணாக்காமல் நிலத்தடியில் சேமிக்க வேண்டும்.
தேவைப்படும் இடங்களில், மாநகராட்சி மூலமாகவும், தன்னார்வலர்கள் மூலமாகவும், சமூக பொறுப்பு நிதியிலிருந்து மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைக்கப்படும். ஏற்கனவே உள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை முறையாக பராமரிக்க வேண்டும். மழைநீரை சேமிக்க, மாநகராட்சியின் நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
அதேபோல், இந்த ஒருமாத காலம் “Catch the Rain Campaign” என்ற தலைப்பில், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மழைநீர் சேமிப்பது தொடர்பாக, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்கனவே உள்ள கட்டடங்களின் உரிமையாளர்கள், அவற்றை முறையாக பராமரித்து, மழைநீர் தடையின்றி நிலத்தடிக்குச் செல்லும் வகையில் மழைநீர் குழாய்கள், வடிகட்டிகள், உறிஞ்சுக்குழிகள் மற்றும் சேகரிப்பு அமைப்புகள் நல்ல நிலையில் உள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
