மலைகளின் அரசி​யான நீல​கிரி மாவட்​டம் ஊட்​டி​யில் தேயிலை தோட்​டங்​கள், பசுமை​யான புல்வெளி​கள், சுற்​றுலா தலங்​களை கண்டு ரசிப்பதற்காக சுற்​றுலா பயணி​கள் அதிகம் வரு​வது வழக்கம்.

நீல​கிரி மாவட்​டத்​தில் ஆண்​டு​தோறும் ஏப்​ரல், மே மாதங்​களில் கோடை சீசன் நடை​பெறுவது வழக்கம். இந்த சீசனில் வெளி​மாநிலங்​கள், பிற மாவட்​டங்​களில் இருந்து லட்​சக்​கணக்​கான சுற்றுலா பயணி​கள் ஊட்​டிக்கு வருவார்கள். அவர்​களை மகிழ்விக்​கும் வகை​யில் மாவட்ட நிர்வாகம் சார்பில், மே மாதத்தில் கோடை விழா மலர்க் கண்காட்சி உள்பட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் கோடை விழா இந்த வார இறுதிக்குள் தொடங்கும் என மாவட்ட அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பொதுவாக மசாலா கண்காட்சி, ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி, காய்கறி மற்றும் பழ கண்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுடன் கோடை விழா நடைபெறும். சுற்றுலாப் பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை முன்கூட்டியே அமைத்துக்கொள்ளும் வகையில் விழா தேதிகள் முன்பே அறிவிக்கப்படும்.

ஆனால், இந்த ஆண்டில் நடைபெற்ற தமிழக சட்டப்பேரவைத் தேர்தலும், புதிய அரசு அமைப்பதில் ஏற்பட்ட தாமதமும் காரணமாக விழா ஏற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது, ஊட்டியில் உள்ள அரசு ரோஜா பூங்கா, அரசு தாவரவியல் பூங்கா மற்றும் குன்னூரிலுள்ள சிம்ஸ் பூங்காவில் ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி மற்றும் பழ கண்காட்சி நடத்துவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் காரணமாகவும், போதிய தயாரிப்பு நேரம் இல்லாததாலும், இந்த ஆண்டு மசாலா மற்றும் காய்கறி கண்காட்சிகள் நடத்தப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. கோடை விழா அட்டவணை இன்னும் சில நாட்களில் தயாராகும் என்றும், இந்த வார இறுதிக்குள் கோடை விழா தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், கடந்த சில வாரங்களாகவே நீலகிரிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். விடுதிகள் மற்றும் ரிசார்ட்டுகளிலும் சுற்றுலாப் பயணிகள் நிரம்பியுள்ளனர். மேலும், நீலகிரி ஆவண மையம், முதலமைச்சர் விஜய் மலர் கண்காட்சியைத் தொடங்கி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.