சக்சஸ்வெர்ஸ் ஏ.எஸ்.கே பவுண்டேஷன் நிறுவனத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் இந்தியா முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பின்பற்றப்படும் சிறந்த கற்பித்தல் உத்திகளைத் தொகுத்து “உயர்கல்விக்கான 101 சிறந்த நடைமுறைகள்” என்ற தலைப்பிலான நூல் வெளியிடப்பட்டது.
அந்த நூலில் கோவையைச் சேர்ந்த ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பின்பற்றப்படும் தொழில் நிறுவனங்கள், முன்னாள் மாணவிகள் மற்றும் சமூகம் என்ற முப்பரிமாணங்களை இணைக்கும் கனெக்ட் என்ற கூட்டு முயற்சியானது இந்தியாவின் சிறந்த கல்வித் திட்டங்களுள் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுப் பாராட்டப் பெற்றுள்ளது.
எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் இதுபற்றிக் கூறும்போது, உயர்கல்வி நிறுவனங்களின் சிறந்த கல்வி நடைமுறைகளில் எங்களுடைய நிறுவனத்தின் கல்விசார் முயற்சியைத் தேசிய அளவில் சிறந்த பயிற்சிகளில் ஒன்றாக அங்கீகரித்துள்ளது பெருமையளிக்கிறது என்று குறிப்பிட்டார்.
கல்லூரி முதல்வர் சித்ரா கூறுகையில், தேசத்தைக் கட்டமைக்கும் எதிர்கால சந்ததிகளான மாணவிகளுக்காக நாங்கள் தொடர்ந்து பல்வேறு கற்பித்தல் நடைமுறைகளை முயற்சித்து வருகிறோம். அதன் பலனாக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
