“புற்றுநோய் என்பது குணப்படுத்த முடியாத ஒரு நோய் பாதிப்பு என்று இருந்த நிலையை இன்றைய நவீன மருத்துவத் தொழில்நுட்பங்கள் மாற்றியுள்ளன. உலக அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பல்வேறு அதிநவீன சிகிச்சை முறைகளின் மூலம் பலவகை புற்றுநோய் பாதிப்புகளை முழுவதுமாக குணப்படுத்த முடியும். இந்த அதிநவீன சிகிச்சை முறைகள் அனைத்தும் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் வழங்கப்படுகின்றன” என்று தெரிவிக்கிறார் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் கதிர்வீச்சு புற்றுநோயியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர்.சுப்பிரமணியம்.

புற்றுநோயைக் குணப்படுத்தும் அதிநவீன சிகிச்சை முறைகள் குறித்து அவர் கூறியதாவது: போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால், புற்றுநோய் என்பது குணப்படுத்த முடியாத நோய் என்ற பொதுவான பயம் பெரும்பாலான மக்களுக்கு இருக்கிறது.

இதனால், புற்றுநோய் பாதிப்பு இருப்பதாகத் தெரிய வந்ததும் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும் பெரும் சிரமங்களை சந்திக்கின்றனர். ஆனால், சுமார் 50 சதவிகித புற்றுநோய் பாதிப்புகளை இன்றைய அதிநவீன சிகிச்சை முறைகளின் மூலம் முற்றிலுமாக குணப்படுத்த முடியும் என்பதுதான் இன்றைய மருத்துவ உலகின் சாதனை.

புற்றுநோயிலிருந்து மீள முடியுமா?

புற்றுநோய்க்கான சிகிச்சையில் முதன்மையானது, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுதான். அதாவது சீக்கிரமாக நோயைக் கண்டுபிடிப்பதையும், நோய் வராமல் தடுக்கும் தற்காப்பு வழிமுறைகளையும்தான் விழிப்புணர்வு என்கிறோம். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பெற்றால், இதைச் சரியாகச் செய்ய முடியும்.

குறிப்பாக மேமோகிராம் பரிசோதனையை ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் பெண்கள் செய்துகொண்டால், மார்பகப் புற்றுநோய் பாதிப்பின் அபாயத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற முடியும்.

இதன்மூலம் நூறு சதவிகிதம் நோயிலிருந்து மீள முடியும். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பை பாப்ஸ்மியர் என்ற பரிசோதனையின் மூலம் சீக்கிரமே கண்டுபிடித்தால், முழுவதுமாக குணப்படுத்த முடியும்.

எனவே, எவ்வளவு சீக்கிரமாக நோயைக் கண்டறிந்து சிகிச்சையைத் தொடங்குகிறோமோ அந்த அளவிற்கு சிகிச்சைக்கான பலன்களும் கிடைக்கும். இதேபோல், தடுப்பூசிகளின் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வருவதையும் தடுக்க முடியும்.

அறிகுறிகள்

புற்றுநோயின் பொதுவான அறிகுறிகளாக, காரணம் இல்லாத எடை குறைவு, இருமல், சளி, உடல் கழிவுகள் வெளியேறும்போது ரத்தம் வெளியேறுவது, வாயில் மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு மேல் ஆறாத புண்கள் ஏற்படுவது மற்றும் பசியின்மை ஆகியவற்றைக் கூறலாம்.

மேலும், உடலில் எந்த பாகத்தில் கட்டி ஏற்பட்டாலும் அது புற்றுநோய்க் கட்டியாக இருக்க வாய்ப்புள்ளது என்பதை உணர வேண்டும். கட்டிக்கான காரணம் என்ன, அது புற்றுநோய்க் கட்டியா என்பதை மருத்துவரை அணுகி உறுதி செய்து கொள்வது அவசியமாகும்.

ஒருங்கிணைந்த சிகிச்சை முறை

ஒருவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட பிறகு நமது கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் ஒருங்கிணைந்த சிகிச்சை முறையை நாங்கள் கடைப்பிடிக்கிறோம். இதற்காக நமது மருத்துவமனையில் ட்யூமர் போர்ட் எனும் பிரிவு செயல்படுகிறது.

இதில் அறுவை சிகிச்சை நிபுணர்கள், கதிரியக்க சிகிச்சை நிபுணர்கள், கீமோதெரபி சிகிச்சை நிபுணர்கள் என பலரும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர். ஒவ்வொரு நோயாளிக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் தன்மையைப் பொறுத்து அவர்களுக்கான சிகிச்சை முறையைத் தீர்மானிக்கின்றனர். இதனால் நோயாளிகளுக்கு சிறந்த பலன்கள் கிடைக்கின்றன.

நவீன தொழில்நுட்பங்கள்

புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சை முறையில் பல்வேறு நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு, இன்று மினிமல் இன்வாசிவ் எனும் முறையின் மூலம் லேப்ராஸ்கோபி மற்றும் ரோபோடிக் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இதனால் அறுவை சிகிச்சை எளிதாக்கப்பட்டுள்ளது. வலியும் ரத்த இழப்பும் குறைந்துள்ளது. அதிக பலன்களும் கிடைக்கிறது, சிகிச்சை முடிந்து சீக்கிரமே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும் முடியும்.

துல்லிய கதிர்வீச்சு சிகிச்சை

கதிர்வீச்சு சிகிச்சையைப் பொறுத்தவரை ரேபிட் ஆர்க், ஐஎம்ஆர்டி, ஐஜிஆர்டி எனும் துல்லிய கதிர்வீச்சு சிகிச்சைகள் நமது மருத்துவமனையில் வழங்கப்படுகின்றன. இவற்றின் அடுத்த கட்டமாக ஸ்டீரியோடாக்டிக் ரேடியோதெரபி எனப்படும் சிகிச்சையும் இங்கு உள்ளது. உடலின் எந்த பாகத்திலும் இருக்கும் மிகச் சிறிய கட்டிகளைக்கூட துல்லியமாக அகற்றும் இந்த அதிநவீன சிகிச்சை முறை இங்கு செய்யப்படுகிறது.

இதன் வகையாக, மூளையில் ஏற்படும் கட்டிகளுக்கு எஸ்ஆர்டி கதிரியக்க சிகிச்சையும், உடலின் பிற பாகங்களில் ஏற்படும் புற்றுநோய்களுக்கு எஸ்பிஆர்டி சிகிச்சையும் வழங்கப்படுகிறது. அருகில் உள்ள ஆரோக்கியமான செல்களுக்கு சேதம் விளைவிக்காமல், புற்றுநோய் செல்களை மட்டும் துல்லியமாக அழிக்கும் சிகிச்சைகள் இவை. இதைத்தவிர தசையில் ஏற்படும் கட்டிகளை நீக்க பிராச்சிதெரபி பயன்படுத்தப்படுகிறது.

கீமோதெரபி சிகிச்சையைப் பொறுத்தவரை மருந்துகளைக் கொண்டு சாதாரண கீமோதெரபி சிகிச்சையும், டார்கெட்டட் கீமோதெரபி சிகிச்சையின் மூலம் மிகக் குறைந்த பக்கவிளைவுகளுடனான சிகிச்சையும் இங்கு வழங்கப்படுகிறது.

இம்யூனோதெரபி  சிகிச்சை

இவற்றோடு இம்யூனோதெரபி  சிகிச்சையின் மூலம் உடலின் நோய் எதிர்ப்புசக்தி ஊக்குவிக்கப்பட்டு புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகின்றன. இந்த சிகிச்சை முறை நுரையீரல் மற்றும் தோல் புற்றுநோய் சிகிச்சைகளுக்கு நல்ல பலன்களைத் தருகிறது.

அதிநவீன சிகிச்சையாக, உடலின் செல் அணுக்களை வைத்தே புற்றுநோயை அழிக்கும் கார் டி செல் தெரபி சிகிச்சையும் இங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோயாளியின் உடலில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட அணுக்களைச் செலுத்தி, புற்றுநோய் செல்களைத் துல்லியமாக அழிக்கும் மருத்துவத் தொழில்நுட்பம் இது. ரத்தப் புற்றுநோய்களுக்கு புதுமை சிகிச்சையாக இது கருதப்படுகிறது.

ஊக்கமும், உதவியும்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைப் பலனின்றி துன்பப்படுபவர்களுக்கு, அவர்களின் துன்பங்களைக் குறைக்க Palliative Care Ward எனும் பிரிவு நமது மருத்துவமனையில் செயல்படுகிறது. இவைமட்டுமின்றி கேன்சர்வ் ஆதரவு குழு (Canserve Support Group) எனும் குழுவின் மூலம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புற்றுநோய் சிகிச்சை முறைகளை மேற்கொள்ள தகுந்த ஊக்கமும், உதவியும் அளிக்கும் வகையில் செயல்படுகிறது.

இதில், புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தவர்கள் மற்றும் ஆலோசகர்கள் நோயாளிகளுக்கு உரிய மருத்துவ ஆலோசனைகளையும் மனநல ஆலோசனைகளையும் நம்பிக்கையூட்டும் ஆலோசனைகளையும் வழங்குகின்றனர்.