நிர்மலா மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறையும், சாகித்ய அகாதெமியும் இணைந்து மேலாண்மை பொன்னுச்சாமியின் படைப்புகள் என்ற தலைப்பில் இலக்கிய அரங்கு நடத்தியது.
கோவை அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் சேனாவரையன், மேலாண்மை பொன்னுச்சாமியின் சிறுகதைகளில் ஒடுக்கப்பட்டவர்களின் குரல் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.
அவரது கதைகளில் கையாளப்படும் பொருண்மைகள் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை எடுத்துக் கூறுவதாகத்தான் அமைகின்றது என்பதை அவர்தம் படைப்புகள் வழியாகவும், கதாபாத்திரத்தின் வாயிலாகவும் எடுத்துரைத்தார்.
கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் சதீஷ்குமார், மேலாண்மை பொன்னுச்சாமியின் சிறுகதைகளில் குறியீடு மற்றும் மையக்கரு என்ற பொருண்மையில் கருத்துரை ஆற்றினார்.
தென் மாவட்டங்களில் காணப்படும் தீப்பெட்டி தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்களைப் பயன்படுத்தக்கூடிய நிலைமை இன்றும் நிலவுகின்றது. மேலும் நாவலாசிரியர் சிறுகதைகளில் கையாளப்படக்கூடிய குறியீட்டுத் தன்மை மூலம் கதையின் நிகழ்வை நகர்த்திச் செல்லும் பாங்கினையும் எடுத்துரைத்தார்.
கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் மகேஸ்வரி மேலாண்மை பொன்னுச்சாமியின் மின்சாரப்பூ என்ற சிறுகதை பற்றியத் திறனாய்வுக் குறித்துப் பேசினார். இக்கதைத் தொகுப்பில் பெரும்பாலும் சிறார் தொழிலாளர்களின் மனநிலை, தந்தை இன்றிப் பரிதவிக்கும் நிலை, பள்ளிக்குச் செல்ல வேண்டிய வயதில் ஆடு மேய்க்கும் தொழிலுக்குச் செல்வதால் ஏற்படக்கூடிய மன உளைச்சல், கல்வியறிவு இல்லாததால் ஏற்படக்கூடிய அறிவின்மை ஆகியன குறித்தும் எடுத்துரைத்தார்.
