கோவை சாய்பாபா காலனி பகுதியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிகள் இந்த மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் வகையில் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்தார்.
மேட்டுப்பாளையம் சாலையில் சாய்பாபா காலனி பகுதியில் 1.2 கிலோமீட்டர் நீளத்தில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் மேம்பாலப் பணிகள் 2024ம் ஆண்டு தொடங்கப்பட்டன. பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில் அமைச்சர் சம்பத்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஒப்பந்தத்தின்படி ஆகஸ்ட் மாதத்தில் பணிகள் நிறைவடைய வேண்டிய நிலையில், தற்போது 88 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மேம்பாலத்தை திறக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேம்பாலப் பணிகள் தரத்தில் எந்தவித குறைபாடும் இல்லாமல் மேற்கொள்ளப்படுகிறது. பணிகள் விரைவாக நிறைவேற்றப்படும். இப்பகுதியில் செயல்படும் இரண்டு காய்கறி சந்தைகள் காரணமாக ஏற்படும் போக்குவரத்து சிக்கல்கள் குறித்து வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

மேம்பாலத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சர்வீஸ் சாலை குறுகலாக இருப்பது தொடர்பான கேள்விக்கு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
மேலும், வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதியில் நிலத்தடி நீர் மஞ்சள் நிறமாக இருப்பதாக எழுந்துள்ள புகார்கள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது. 40 ஏக்கர் பரப்பளவிலான குப்பைக் கிடங்கை சீரமைத்து மீண்டும் பசுமைப் பகுதியாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
வெள்ளலூர் பேருந்து நிலைய விரிவாக்கம் தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். சிங்காநல்லூர் பகுதியில் புதிய மேம்பாலம் அமைப்பதற்கான நிதி ஒப்புதலுக்காக மத்திய அரசிடம் திட்டம் அனுப்பப்பட்டுள்ளது.
மழைக்காலங்களில் மேம்பாலத்தில் தேங்கும் மழைநீர் விரைவாக வெளியேறும் வகையில் வடிகால் வசதிகள் முறையாக ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார்.
