கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று அதில் மீண்டவர்களுக்கும், சிகிச்சை பெற்று புற்றுநோயை வெல்ல தயாராகி வரும் மருத்துவ பயனாளிகளும் தன்னம்பிக்கை பெற வேண்டி கே.எம்.சி.ஹெச் சார்பில் “ரோஸ் தினம்” ஞாயிறு அன்று அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி. பழனிசாமி தலைமை தாங்கினார். பிரபல தமிழ் சொற்பொழிவாளர் சுகி சிவம், நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரை வழங்கினார்.

அது என்ன ரோஸ் தினம்?
உலக ரோஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது. புற்றுநோயுடன் போராடி வரும் மனிதர்களின் வாழ்க்கையில் நம்பிக்கை, மகிழ்ச்சி, மன வலிமையை விதைப்பதற்காகவே இந்த சிறப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த நாளுக்குப் பின்னால் ஒரு நெகிழ்ச்சியான வரலாற்றுப் பின்னணி உள்ளது.
1994-ஆம் ஆண்டு, ‘ஆஸ்கின்ஸ் டியூமர்’ என்ற அரிதான ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கனடா நாட்டைச் சேர்ந்த 12 வயது சிறுமி மெலிண்டா ரோஜாவின் நினைவாகவே இந்நாள் உருவாக்கப்பட்டது.
புற்றுநோய் பாதிப்பு இருப்பதை கண்டறிந்த பின்னர், சிறுமி மெலிண்டா இன்னும் சில வாரங்கள் மட்டுமே உயிரோடு இருப்பார் என்று மருத்துவர்கள் கணித்திருந்தனர்.
ஆனால், தன் அசைக்க முடியாத நம்பிக்கையால் மருத்துவர்களின் கணிப்பையும் தாண்டி மேலும் 6 மாதங்கள் அவர் உயிர் வாழ்ந்தார். அந்த ஆறு மாத காலத்தில், தான் இருந்த மருத்துவமனை வளாகத்தையே மகிழ்ச்சியினாலும் நேர்மறை எண்ணங்களினாலும் அவர் நிரப்பினார்.
சக புற்றுநோய் நோயாளிகளுக்கு கவிதைகளும் கடிதங்களும் எழுதி, அவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைத்தார். எனவே புற்றுநோயை எதிர்த்துப் போராடும் அனைவரின் வாழ்க்கையிலும் இதுபோன்ற ஒரு தன்னம்பிக்கை பிறக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த நாள், அவர் நினைவாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு வலியும் ஒரு பாடத்தை கூறும் – சுகிசிவம்
இறைவனின் படைப்பில் ஜெராக்ஸ் (நகல்கள்) கிடையாது, ஒவ்வொரு படைப்புமே தனிச்சிறப்பு கொண்ட ‘மாஸ்டர்பீஸ்’ படைப்புகள் தான். எனவே ஒன்று போல மற்றொன்று இருப்பது கிடையாது.
மருத்துவத்திலும் ஒருவருக்கு பொருந்தும் சிகிச்சை முறை மற்றவருக்கும் பொருந்தும் என்பது கிடையாது. எனவே உடல் பாதிப்பு ஏதேனும் இருந்தால் அது குறித்து தெரிந்தவர்களிடமோ அல்லது தெளிவில்லாதவர்களிடமோ, குறிப்பாக இணையதளத்திடமோ தகவல்களை கேட்டுக் கொள்வதை விட, மருத்துவம் கற்ற நிபுணர்களிடம் கேட்பது அவசியம் என்று கூறினார்.
நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் மீண்டு வருவதற்கு சரியான திட்டமிடல், சிகிச்சை, தொடர் கண்காணிப்பு ஆகியவை அவசியம். அவர்கள் விரைவில் மீண்டு வருவதற்கு குடும்பத்தினரும், அவர்களின் பண்பு வார்த்தைகளும் முக்கிய பங்கு ஆற்றுகிறது.
இதுபோன்ற நேரங்களில் பாதிக்கப்பட்டவர்களை விட, குடும்பத்தினரும், நோய்வாய்ப்பட்டவர்களை பராமரிக்க உடன் இருப்பவர்களுக்கும் உளவியல் ரீதியாக சோர்வு ஏற்பட வாய்ப்பு அதிகம். இவர்களுக்கும் தெம்பு தரும் விதத்தில் ஆலோசனைகளை மருத்துவமனைகள் வழங்க வேண்டும்.
நமது வாழ்க்கையில் வரக்கூடிய ஒவ்வொரு வலியும் தனித்துவமானது, அது வரும்போது நமக்கு ஒரு பாடத்தை ஏந்தி வருகிறது. இதற்கு உதாரணமாக கொரோனா காலத்தை அவர் குறிப்பிட்டார். ஊரடங்கு காலத்தில் வீட்டில் முடங்கிக்கிடந்த போது, பல உறவுகள் வலிமையானது, ஒருவர் மற்றொருவரை புரிந்து கொள்ள அது ஒரு காலமாக இருந்தது.
அதுபோல துயரம் வந்தாலும் உறவுகள் உடன் இருந்தால், அது உடல் நலம் குறைந்தவர்களுக்கு எளிதில் மீண்டு வர உத்வேகம் தரும். எனவே அன்பு காட்ட தவற கூடாது.
உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை பார்த்து அவர், “இன்று மருத்துவம் வளர்ந்துள்ளது, நம்மை மீட்க நிபுணர்கள் உள்ளனர். எனவே நீங்கள் உங்களை வெறுத்து விடாதீர்கள். உடல் நலம் குறைந்து இருந்தாலும் உங்களை நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள மனதை தயார் செய்து கொள்வதும் உங்கள் கடமை தான்,” என்று கூறினார்.
மனிதகுலம் எத்தனையோ நோய்களை வென்றுள்ளது. புற்றுநோயையும் வெல்லக்கூடியது, இதற்கு இறைவனின் ஆசீர்வாதமாக மருத்துவர்கள் உள்ளனர். இந்த ஆசீர்வாதம் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று கூறினார்.

இந்த நிகழ்வில் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி, டாக்டர் என்.ஜி.பி கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் மதுரா பழனிசாமி, மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை மூத்த நிபுணர்கள், மருத்துவர்கள், மருத்துவ மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
(நிகழ்வில் நடைபெற்ற சுவாரஸ்யமான கலந்துரையாடல்களுடன் சிறப்பு கட்டுரை வரும் ஞாயிறு வெளியாகும் தி கோவை மெயில் வார இதழில் வெளிவரும்)
