உலகளாவிய வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தீவிர வெப்ப அபாயத்தை எதிர்கொள்ளும் நகரங்கள் குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ள சமீபத்திய ஆய்வு கவலைக்குரிய தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.
உலகின் 205 முக்கிய நகரங்களை ஆய்வு செய்த இந்த அறிக்கை, வெப்ப அபாயம் அதிகமுள்ள முதல் 50 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 14 நகரங்கள் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வில் வெப்பநிலை மட்டுமின்றி, காற்றின் ஈரப்பதம், காற்றின் வேகம், மக்கள்தொகை அடர்த்தி, நகரங்களின் உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் வெப்பத்தை எதிர்கொள்ளும் திறன் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
அதிக வெப்ப அபாயம் கொண்ட நகரங்களின் பட்டியலில் ஈராக்கின் அல் பஸ்ரா நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவின் அகமதாபாத் உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளதுடன், மதுரை ஏழாவது இடத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், போபால் 15-வது இடத்திலும், கான்பூர் 20-வது இடத்திலும் இடம்பிடித்துள்ளன.
இந்திய நகரங்களிலேயே அகமதாபாத், நாக்பூர் மற்றும் மதுரை ஆகியவை அதிக வெப்ப அபாயம் கொண்ட நகரங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. குறிப்பாக, மதுரை உலகின் முதல் 10 அதிக ஆபத்துள்ள நகரங்களில் இடம்பெற்றுள்ளது.
முக்கிய சுற்றுலா நகரமான ஜெய்ப்பூரும் வெப்ப அபாயத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நகரங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதேபோல், மும்பை, நாக்பூர் மற்றும் புனே உள்ளிட்ட பல இந்திய நகரங்கள் கடந்த மார்ச் மாதம் முதல் கடுமையான வெப்ப அலைகளையும், தொடர்ச்சியான ஆரஞ்சு எச்சரிக்கை நிலைகளையும் எதிர்கொண்டு வருகின்றன. இதற்கு எல் நினோ காலநிலை நிகழ்வு முக்கிய காரணமாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆய்வின் படி, அதிக அபாயத்தில் உள்ள நகரங்களில் 95 சதவீதத்திற்கும் மேற்பட்டவை தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளன. இந்தியா, பாகிஸ்தான், கானா மற்றும் நைஜீரியா போன்ற நாடுகளில் அதிக எண்ணிக்கையிலான நகரங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
மரங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் மும்பை போன்ற நகரங்கள் வெப்பத்தை எதிர்கொள்ளும் திறனில் பின்தங்கியுள்ளன என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் பல முக்கிய நகரங்களில் கடுமையான வெப்ப பாதிப்பும், அதனை சமாளிக்கும் திறன் குறைவும் ஒன்றாகக் காணப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. இந்த இரு காரணிகளும் இணைந்து வெப்ப அபாயத்தை மேலும் தீவிரப்படுத்துகின்றன.
