கோவை சர்வதேச விமான நிலைய வளாகத்தில் பறவைகள் மற்றும் நாய்களின் நடமாட்டம் அதிகரித்து வருவதாகவும், இதனால் விமானப் போக்குவரத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் விமான நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. இப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண விமான நிலைய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளன.

கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும், ஷார்ஜா, அபுதாபி, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் நேரடி விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், விமான நிலைய ஓடுபாதை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பறவைகள், நாய்கள் நடமாடுவது விமானங்களின் புறப்பாடு மற்றும் தரையிறக்கத்தின்போது பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

கடந்த காலங்களிலும் கோவை விமான நிலையத்தில் பறவைகள் மோதியதால் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தற்போது ஓடுபாதை அருகே பறவைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், அவற்றை விரட்டுவதற்காக ஊழியர்கள் வெடிகளை வெடித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து விமான நிறுவன வட்டாரங்கள் கூறுகையில், விமானங்களைப் பாதுகாப்பாக இயக்குவதற்கு ஓடுபாதை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பறவைகள், நாய்கள் உள்ளிட்ட விலங்குகளின் நடமாட்டம் இல்லாததை உறுதி செய்ய வேண்டும். ஆனால், சமீப நாட்களாக விமான நிலைய ஓடுபாதை அருகிலும், நுழைவாயில், புறப்பாடு மற்றும் வருகைப் பகுதிகளிலும் புறாக்கள் மற்றும் நாய்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

ஏற்கெனவே பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மழை காரணமாக விமானங்களை இயக்குவதில் சவால்கள் நிலவுகின்றன. இத்தகைய சூழலில் பறவைகள் மற்றும் நாய்களின் நடமாட்டம் கூடுதல் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. எனவே, விமான நிலைய நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்துடன் இணைந்து, இப்பிரச்சினைக்குத் தீர்வு காண உரிய தடுப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பறவைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. சுற்றுப்புறப் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் இறைச்சிக் கடை உரிமையாளர்கள் இறைச்சிக் கழிவுகளைக் கொட்டுவதால் அவற்றைத் தேடி நாய்கள் மற்றும் பறவைகள் வருகின்றன. இதுகுறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், வரும் நாட்களில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தி, தேவையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.