கோவையில் நடைபெற்ற ‘பெரிதினும் பெரிது கேள்’ தொழில்முனைவோர் மாநாட்டில், முதல் முறையாகப் புத்தகம் எழுதிய 36 பேர் தாங்கள் எழுதிய புத்தகங்களை ஒரே மேடையில் வெளியிட்ட நிகழ்வு, லிங்கன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது.

ஞான சஞ்சீவனம் குருகுலம் மற்றும் மிஷன் மில்லியனர் கிளப் சார்பில், இரண்டாவது ஆண்டாக ‘பெரிதினும் பெரிது கேள் – 2026’ மாநாடு கோவை லீ மெரிடியன் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. இதில் சுமார் 1,200 தொழில்முனைவோர்கள் பங்கேற்றனர்.
ஞான சஞ்சீவனம் குருகுலம் தலைவர் சசி குமார் கூறுகையில்: வேலை தேடுபவர்களாக மட்டுமின்றி, மற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்முனைவோராக இளைஞர்கள் உருவாக வேண்டும் என்ற நோக்கில் இம்மாநாடு நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மாநாட்டின் முக்கிய நிகழ்வாக, இதுவரை புத்தகம் எழுதாத 36 முதன் முறை எழுத்தாளர்கள் தாங்கள் எழுதிய 36 புத்தகங்களை ஒரே மேடையில் வெளியிட்டனர். இதில் 27 வயது முதல் 56 வயது வரையிலான பல்வேறு வயதினரும், வெவ்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களும் தங்களது சிந்தனைகளையும், அனுபவங்களையும் புத்தகங்களாகப் பதிவு செய்திருந்தனர். இந்த நிகழ்வு லிங்கன் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றது.
விழாவில் ஸ்கை குழும நிறுவனர் சுந்தர்ராஜ், கோவை ரூட்ஸ் குழும மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குநர் கவிதாசன், தைரோகேர் நிறுவனர் வேலுமணி, சாணக்கியா தொலைக்காட்சி நிறுவனர் ரங்கராஜ் பாண்டே, முன்னாள் காவல் கண்காணிப்பாளர் கலியமூர்த்தி, ஆரோக்கியா ஹெல்த் கேர் நிர்வாக இயக்குநர் சிவராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
