கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து மண்டலங்களிலும் ரூ.18.21 கோடி மதிப்பீட்டில் 117 அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட வார்டுகளில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில், 2026-27ம் நிதியாண்டில் ரூ.9.73 கோடி மதிப்பீட்டில் 17.31 கி.மீ., நீளத்துக்கு 96 தார் சாலைகள் புதுப்பிக்கப்பட உள்ளன. அதேபோல், மாநில நிதிக்குழுவின் நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4.15 கோடி மதிப்பீட்டில் 3.19 கி.மீ., நீளத்துக்கு ஒன்பது சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவர்களுக்குக் கூடுதல் வகுப்பறை வசதிகளை ஏற்படுத்தவும், ஏற்கனவே உள்ள வகுப்பறைகளை மேம்படுத்தவும், ஆறாவது மாநில நிதிக்குழுவின் பள்ளி மேம்பாட்டு மானியத்தின் கீழ் ரூ.2.61 கோடி மதிப்பீட்டில் ஐந்து பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைகளின் ஆரம்பகால பராமரிப்பு மற்றும் முன்பருவக் கல்விக்கான வசதிகளை மேம்படுத்தும் வகையில், ரூ.64.50 லட்சம் மதிப்பீட்டில் மூன்று அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டுதல் மற்றும் மறுகட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
மாநகராட்சிப் பகுதிகளில் பசுமைப் பரப்பை அதிகரித்து, பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு மற்றும் நடைப்பயிற்சி வசதிகளை ஏற்படுத்தும் நோக்கில், முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் நான்கு பூங்காக்கள் அமைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சாலைப் பணிகள், பள்ளி வகுப்பறைகள், அங்கன்வாடி கட்டடங்கள், பூங்காக்கள் உள்ளிட்ட மொத்தம் 117 பணிகளுக்கு ரூ.18.21 கோடி மதிப்பீட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அரசின் நிர்வாக அனுமதி கிடைத்ததும், பணிகள் விரைவில் துவங்கப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
