கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பிரபலமான ஸ்ரீ ஆனந்தாஸ் நிறுவனம், தனது அடுத்தகட்ட வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் வகையில், ஆய்ரா வென்ச்சர்ஸ் தலைமையில் ரூ.110 கோடி புதிய முதலீட்டைத் திரட்டியுள்ளது.

இந்த முதலீட்டுச் சுற்றில் வாட்டர்ஃபீல்டு அட்வைசர்ஸ், ஏற்கனவே முதலீடு செய்துள்ள ஏ91 பார்ட்னர்ஸ், ஐதாட் ஃபைனான்சியல் கன்சல்டிங் எல்எல்பி மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ஏ91 பார்ட்னர்ஸ் தலைமையில் ஸ்பிரிங் மார்க்கெட்டிங் கேபிடல் பங்கேற்புடன் ரூ.175 கோடி முதலீட்டை ஸ்ரீ ஆனந்தாஸ் நிறுவனம் பெற்றிருந்தது. 2025-ம் நிதியாண்டில் ரூ.284 கோடி வருவாயை ஈட்டியுள்ள இந்நிறுவனம், முந்தைய ஆண்டைக் காட்டிலும் 20.9 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

தற்போது திரட்டப்பட்டுள்ள ரூ.110 கோடி முதலீட்டின் மூலம் புதிய கிளைகளைத் தொடங்குதல், உற்பத்தித் திறனை அதிகரித்தல், உற்பத்தி மற்றும் விநியோகக் கட்டமைப்புகளை மேம்படுத்துதல், அன்றாட வர்த்தகச் செயல்பாடுகளுக்குத் தேவையான நிதி ஆதாரத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை நிறுவனம் மேற்கொள்ள உள்ளது.

9b 2 scaled

இதுகுறித்து ஸ்ரீ ஆனந்தாஸ் நிறுவனத்தின் இயக்குநர் என்.வி நம்மாழ்வார் கூறியதாவது: இந்திய உணவுச் சந்தையில் பாரம்பரிய இனிப்புகள் மற்றும் கார வகைகளுக்கு மக்களிடையே எப்போதும் தனி வரவேற்பு உள்ளது. அதேசமயம், இந்தத் துறையில் தரம், சுவை மற்றும் ஒரே சீரான தயாரிப்பு முறைகளை உறுதி செய்யும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட வளர்ச்சிக்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளன.

ஒவ்வொரு குடும்பமும் தாங்கள் விரும்பும் பாரம்பரிய சுவையை, தினமும் புதிதாகத் தயாரிக்கப்பட்டு, தரத்திலும் சுவையிலும் நம்பிக்கையளிக்கும் வகையில் பெற விரும்புகின்றனர். இந்த வாய்ப்பை உணர்ந்து, அதனைச் சிறப்பாக முன்னெடுத்துச் செல்வதே எங்களது நோக்கமாகும்.

1998-ம் ஆண்டு முதல் எங்களது வளர்ச்சிப் பயணத்தில் கடைப்பிடித்து வரும் அதே திட்டமிடல் மற்றும் நிதி மேலாண்மை ஒழுங்குடன், தற்போது கிடைத்துள்ள முதலீட்டையும் நீண்டகால வளர்ச்சிக்காகப் பயன்படுத்துவோம்.

புதிய இடங்களில் சரியான திட்டமிடலுடன் கிளைகளைத் தொடங்குவது, உற்பத்திக் கூடங்கள் மற்றும் விநியோகக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது, பணியாளர்களின் திறனை மேம்படுத்துவது என ஒவ்வொரு முதலீடும் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் வகையில் பயன்படுத்தப்படும். இவ்வாறு கூறினார்.