கோவை மாநகர் பகுதியில், காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகம், அதிக ஒலி எழுப்பும் சைலன்ஸர்கள் கொண்ட வாகனங்களுக்கு ஆன்லைன் முறையில் அபராதம் விதிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

சின்னியம்பாளையம் பகுதியில், பீளமேடு போக்குவரத்து காவல்துறையினர் சார்பாக அதிநவீன வாகனங்களின் வேக கணக்கீட்டு கருவி மூலமாக, அந்தந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றது.

போக்குவரத்து கிழக்கு பிரிவு ஆய்வாளர் செந்தில்குமார், பீளமேடு உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், காவலர்கள் மோகன் பாபு, வெங்கடாசலபதி, மாசினிதுரை, சென்ட்ராயன் ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்த பரிசோதனையை மேற்கொண்டனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்தவும், சாலை விதிகளை பொதுமக்கள் மத்தியில் பின்பற்ற உரிய நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் மாநகர காவல் ஆணையர் கண்ணன் உத்தரவின் பேரில், இந்த அதிநவீன கண்காணிப்பு கருவி மூலமாக கண்காணித்து வருகின்றோம்.

இதில், வாகனத்தின் வேகத்தை கணக்கிட்டு அவர்களின் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கபடும். தலைகவசம் அணியாமல் இயக்குவது, இரு சக்கர வாகனத்தில் மூவர் பயணிப்பது, அதிக ஒலி எழுப்பும் சைலன்ஸர்களை பொருத்தி வாகனங்களை இயக்குவது, கார்களில் சீட் பெல்ட் போடாமல் இயக்கப்படுவது, அடுத்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டுவது என அனைத்தையும் கணக்கிட்டு, அவர்களின் வாகன பதிவெண்களை கொண்டு வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கபட்டு வருகிறது.

மேலும் தற்போதைய வாகனங்கள் அனைத்தும், அவர்களின் செல்போன் எண்ணுடன் பதிவு செய்யப்பட்டவர்களுக்கு அபராதங்கள் குறுஞ்செய்தி மூலமாக அனுப்பப்படும். பரிவாகன் செயலி மூலமாக ஆன்லைன் மூலமாக அபராத தொகை செலுத்தலாம். அபராதங்களை தவிர்க்க அரசின் வழிமுறைகளை வாகன ஓட்டிகள் பின்பற்றினால் தவிர்க்கலாம் என்றனர்.