சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் கதை எழுதுவது எப்படி? பயிரலங்கம் நடைபெற்றது. பயிலரங்கினைப் பிரபல எழுத்தாளரும், கோவை வசந்தவாசல் கவிமன்றத்தின் செயலாளருமான கோவை பிரசாத் நடத்தினார்.
அவர் கூறியதாவது: உணவு நம் உடலுக்கு என்றால், உணர்வை உயிர்ப்போடு வைப்பது நம் உள்ளத்திற்குத் தேவையான இலக்கியம். வாழ்க்கைக்கு ஓர் அர்த்தமும் பொருளும் கிடைக்கச் சிறுகதை போன்ற இலக்கியங்கள் மிக அவசியம்.
ஒரு சிறுகதையை உருவாக்குவதற்கு நான்கு பூக்கள் மிக முக்கியம்: எடுப்பு (ஆரம்பம்): கதையின் முதல் வரியிலேயே வாசகரை கதைக்குள் அழைத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு வரியும் முடிவை நோக்கி நகர வேண்டும்.
தொடுப்பு (வளர்ச்சி): கதையின் கருவை சுவாரசியமாக அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்த்திச் செல்வது. முடிப்பு (முடிவு): கதையின் இறுதியில் ஒரு எதிர்பாராத திருப்பத்தையோ அல்லது ஆழமான சிந்தனையையோ வைத்து நிறைவு செய்வது. தலைப்பு: கதைக்கு ஏற்ற பொருத்தமான மற்றும் கவர்ச்சிகரமான பெயரைச் சூட்டுவது.
சிறுகதை எழுதுவதற்கான முக்கிய யுக்திகள் பல இருக்கின்றன. நம் கண்முன்னே நடக்கும் நிகழ்வுகள் அல்லது பிறர் சொல்லி நாம் கேட்கும் விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு கதை உருவாக்கலாம். வழக்கமான பாதையில் யோசிக்காமல், எதிர்பாராத கோணத்தில் சிந்திப்பது தான் கதையின் உயிர் போன்றது.
சிறுகதையின் முக்கிய இலக்கணமே சுருங்கக் கூறலும், சுருக்கக் கூறலும் தான். அதிக வர்ணனைகள் இல்லாமல் நேரான பொருளுடன் சுருக்கமாக எழுத வேண்டும். ஒரு சிறுகதையில் அதிகபட்சமாக 3 அல்லது 4 கதாபாத்திரங்கள் மட்டுமே இருக்க வேண்டும்.
சிறுகதை என்பது ஒரு பெரிய நந்தவனத்தில் இருக்கும் ஒரு சின்னச் செடியிலுள்ள ‘பூ’ போன்றது. சமுதாயத்தில் நடக்கும் சம்பவங்களோடு நம் சிந்தனையை இணைத்து, இந்த யுக்திகளைக் கையாண்டால் நீங்களும் ஒரு சிறந்த சிறுகதையைப் படைக்க முடியும் என்று பேசினார்.
தொடர்ந்து ஒரு கதை நிகழும் சூழலைச் சொல்லி மாணவர்களைக் கதை உருவாக்கிக் கூறப் பயிற்சியளித்தார். நிகழ்வில் துணை முதல்வர் சக்திவேல், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
