தமிழக அரசின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாலை 5.30 மணிக்கு நிதியமைச்சர் மரிய வில்சன் செய்தியாளர்களைச் சந்தித்து இந்த அறிக்கையை வெளியிடவுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் வெளியாகும் இந்த அறிக்கை, மாநிலத்தின் தற்போதைய நிதி நிலை குறித்து விரிவான தகவல்களை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் அரசுக்கு கிடைத்த வருவாய், மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள், துறைகள் வாரியாக செய்யப்பட்ட நிதி ஒதுக்கீடுகள், மாநிலத்தின் மொத்தக் கடன், கடனுக்காக செலுத்தப்பட்ட வட்டி உள்ளிட்ட முக்கிய நிதி விவரங்கள் இதில் இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய அரசு பதவியேற்ற பிறகு, தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்றியுள்ளது. ரூ.50,000 வரை அறிவிக்கப்பட்டிருந்த பயிர்க்கடன் தள்ளுபடி ரூ.75,000 ஆக உயர்த்தி செயல்படுத்தப்பட்டது. சிங்கப்பெண் அதிரடிப்படை, 200 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. காலை உணவுத் திட்டம் 8-ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட்டு, வரும் செப்டம்பர் 17 முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு மாத காலத்தில் 5 திட்டங்கள் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு நிலையில், மகளிருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை, 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ரூ.3,000 வழங்கும் திட்டம், மகளிருக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் குறித்த விவரங்கள் இந்த வெள்ளை அறிக்கைக்குப் பிறகு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
