ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 7000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் கோயம்புத்தூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களும் வெளி மாநிலங்களைச் சார்ந்த மாணவர்களும் அடங்குவர்.
இம்மாணவர்கள் விடுதியில் தங்கி கல்வி பயிலும் வகையில் கல்லூரி வளாகத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் பிரத்யேக விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளனர். அண்மையில் நவீன வசதிகளுடன் 500 மாணவர்கள் தங்குவதற்கான 10 அடுக்கு மாடியுடன் கூடிய புதிய விடுதி மாணவர்களின் பயன்பாட்டுக்குத் திறந்து வைக்கப்பட்டது.
விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு பிக்கிள் பால், சதுரங்கம், கேரம், டேபிள் டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளுக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக மாணவர்களின் விடுதியில் ரூ. 1 கோடி மதிப்பில் பிரம்மாண்டமான உடற்பயிற்சிக் கூடம் திறப்பு விழா நடைபெற்றது. எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பி & எஸ் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் பிரியங்கா சுந்தர் குத்து விளக்கேற்றி உடற்பயிற்சி கூடத்தைத் திறந்து வைத்தார்.
கல்லூரியின் முதல்வர் சிவக்குமார், பல்வேறு துறைகளைச் சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
