7 மாத, 8 மாத கைக்குழந்தகளை சுமந்த படி தாய்மார்கள் கோவையில் நடைபெறும் ஒரு மாரத்தான் நிகழ்வில் அதிகாலையே புன்னகை உடன் பங்கேற்கின்றனர் என்றால், அதுவும் பொள்ளாச்சி, ஈரோடு போன்ற பகுதிகளில் இருந்து வந்து காலை 5 மணிக்கே பங்கேற்கின்றனர் என்றால் நிச்சயம் அது ஒரு நல்ல காரணத்திற்காக தான் இருக்கமுடியும்.

ஞாயிறு காலை கோவை மணி மேல்நிலை பள்ளி சாலை வழியே, மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்ற ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் ‘ரன் பார் லிட்டில் ஹார்ட்ஸ்’ மாரத்தான் நிகழ்ச்சியில் இதுபோல பல இளம் தாய்மார்கள், தந்தைகள் குழந்தைகளுடன் பங்கேற்றது கவனத்தை ஈர்த்துள்ளது.

இவர்களில் ஒருவரிடம் பேசியபோது, அவர் “நான் பொள்ளாச்சியில் இருந்து வருகிறேன். நான் முதன்முதலாக பங்கேற்கும் மாரத்தான் இது. எனது 7 மாத குழந்தைக்கு பிறவியிலேயே இதய பாதிப்பு உள்ளதாக தெரிந்து, ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றான். இன்று அவனுடன் நான் இந்த நிகழ்வில் பங்கேற்று, பிறருக்கும் நம்பிக்கை ஏற்படுத்த விரும்பி பங்கேற்றுள்ளேன்,” என்று கூறினார்.

இது ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் ‘ரன் பார் லிட்டில் ஹார்ட்ஸ்’ மாரத்தான் நிகழ்வில் பங்கேற்ற 4000 பங்கேற்பாளர்களில் ஒருவரின் கருத்தே. இது போல பல கதைகள், பல உணர்வுகள் இந்த நிகழ்வில் பரிமாறிக்கொள்ளபட்டது.

இந்த மாரத்தான் இதய குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு உதவும் வகையில் நடைபெற்றது. இதில் திரட்டப்படும் பங்கேற்பு கட்டணங்கள் இந்த குழந்தைகளின் சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும். இதற்கு முன் மூன்று முறை இந்த நிகழ்ச்சி நிகழ்ந்துள்ளது. இன்று நான்காவது முறையாக நடைபெற்ற இந்நிகழ்வில் கோயம்புத்தூர் மற்றும் மேற்கு தமிழக பகுதிகளில் இருந்து பெரும்திரளாக மக்கள் இதில் கலந்துகொண்டு 10 கி.மீ, 5 கி.மீ, 3 கி.மீ மற்றும் 1 கி.மீ. பிரிவுகளில் ஓடினர்.

கோவை மாநகர காவல்துறை உதவி ஆணையர் கோகுலகிருஷ்ணன், ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர்.ரகுபதி வேலுசாமி, பிரீமியர் பைன் லினென்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சாந்தி ஸ்ரீனிவாசன் மற்றும் ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் ஆகியோர் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர்.ரகுபதி வேலுசாமி, ‘தி கோவை மெயில்’ லுக்கு அளித்த பேட்டியில், ” ஒவ்வொரு ஆண்டும் இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்பவர்கள் எண்ணிக்கை உயர்ந்துகொண்டு செல்வதை காண முடிகிறது. சென்ற ஆண்டு 3500 பேர் பங்கேற்ற நிலையில், இம்முறை பதிவு செய்தவர்களே அதை விட அதிகமாக இருந்தனர். குழந்தைகளுக்காக இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறோம் என்பதால் அதற்கு மக்களின் ஆதரவு கூடுகிறது. மக்கள் மத்தியிலும் சிறுவர்களுக்கு ஏற்படும் இதயம் மற்றும் புற்றுநோய் தொடர்பான பாதிப்புகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கிறது,” என்றார்.
“இந்த நிகழ்வில் கலந்துகொள்வதன் மூலம் குழந்தைகளுக்கு உதவ அவர்கள் விரும்புவதும் ஓவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது,” என கூறினார்.
பிரீமியர் பைன் லினென்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சாந்தி ஸ்ரீனிவாசன் கூறுகையில், ” இங்கு பங்கேற்றத்தில் மிகுந்த மகிழ்ச்சி. அதுவும் 1 வயதுக்கும் குறைந்த குழந்தைகளை பெற்றோர் இங்கு சுமந்து வந்து இப்படி ஒரு நல்ல காரணத்திற்காக நடக்கும் போட்டியில் பங்கேற்க செய்யும் உயர்ந்த எண்ணத்தை முதல் முறையாக பார்த்தேன், வியந்தேன்,” என பகிர்ந்துகொண்டார்.
நிகழ்வில் உதவி ஆணையர் கோகுலகிருஷ்ணன் பேசுகையில், :இந்த ஓட்டம் என்பது இன்றுடன் இன்றுவிடாமல் மக்கள் வாழ்வில் தினமும் கடைபிடிக்கப்படும் ஒரு உடற்பயிற்சியாக இருக்கவேண்டும். ஒரு நல்ல நோக்கத்துடன் ஜி.கே.என்.எம். மருத்துவமனை நடத்தும் இந்த மாரத்தான் போட்டி சிறப்புடன் தொடர எனது வாழ்த்துக்கள்,” என கூறினார்.

