கோவை விமான நிலைய விரிவாக்க திட்டத்திற்கான மாஸ்டர் பிளானுக்கு,‘நிதி ஆயோக்’ ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்காக காத்திருப்பதாக கோவை விமான நிலைய இயக்குநர் முகமது ஆரிப் தெரிவித்தார்.
கோவை விமான நிலைய வளாகத்தில் செய்தியாளர்களிடம் விமான நிலையத்தின் இயக்குநர் முகமது ஆரிப் கூறியதாவது: கோவை விமான நிலையம் தற்போது 400 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்பட்டு வருகிறது. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு கூடுதலாக 627 ஏக்கர் நிலப்பரப்பில் விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் 621 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு, விமான நிலைய ஆணையகத்திடம் வழங்கியுள்ளது. மீதமுள்ள 6 ஏக்கர் நிலம் விரைவில் வழங்கப்படும்.
முதல்கட்டமாக சுற்றுச்சுவர் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன. ஒரு பகுதியில் வழிப்பாதைக்கு இடம் வழங்குவது தொடர்பாக நில உரிமையாளர்கள் ஆட்சேபனை தெரிவித்த நிலையில், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தி தந்துள்ளது.
கோவை விமான நிலையத்தின் விரிவாக்க திட்டம் மொத்தம் ரூ.2,200 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது உள்ள ஓடுபாதைக்கு மறுபுறம் பிரம்மாண்டமான முறையில் புதிய வருகை, புறப்பாடு டெர்மினல் கட்டிடம், ஓடுபாதை நீளம் அதிகரிப்பு, பயணிகள் வசதிக்கு பல்வேறு உள்கட்டமைப்பு அமைத்தல் போன்ற பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. விமான நிலைய விரிவாக்க திட்டத்திற்கான மாஸ்டர் பிளானுக்கு, ‘நிதி ஆயோக்’ ஒப்புதல் வழங்கிவிட்டது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம்.

தவிர விமான நிலைய விரிவாக்க திட்டத்தை செயல்படுத்துவதற்கு சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளிடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. தற்போது 70 முதல் 80 சதவீதம் வரை ஒப்புதல் பெறும் பணிகள் நிறைவடைந்துள்ளன. மாஸ்டர் பிளானுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டு, அனுமதிகள் அனைத்தும் கிடைத்த பின் விரிவாக்க திட்ட பணிகள் தொடங்கும். மூன்று ஆண்டுகளில் கட்டமைப்பு பணிகள் அனைத்தும் நிறைவடையும்.
அதுவரை தற்போது கோவை விமான நிலையத்தில் நிலவும் இடப்பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண உதவும் வகையில் தற்போது உள்ள கட்டிடத்தில் உள்கட்டமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிகாலை முதல் நள்ளிரவு வரை பயணிகள் நடமாட்டம் உள்ள காரணத்தால் பணிகள் சற்று மிதமான வேகத்தில் மேற்கொள்ளப்படுகின்றன. விரைவில் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்.
உள்நாட்டு பிரிவில் விமான சேவைகளை தொடங்க ‘ஆகாஸா ஏர்’ என்ற ஏர்லைன்ஸ் நிறுவனம் ஆர்வம் காட்டியுள்ளது. தற்போது தினமும் 25, 26 விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தினசரி இயக்கப்படும் விமானங்கள் எண்ணிக்கை 30-ஆக அதிகரிக்கும்.
விமான நிலைய வளாகத்தில் தற்போது வாகனங்கள் பார்க்கிங் பகுதியில் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக 3 நிமிடங்களுக்கு மேல் வாகனங்களை நுழைவாயில் பகுதியில் மற்ற வாகனங்களுக்கு இடையூறாக நிறுத்தினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நடைமுறையில் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளோம். குத்தகை நிறுவனம் விரைவில் மாற்றப்படும்.
எதிர்வரும் நாட்களில் பார்க்கிங் ஒப்பந்த நிறுவனத்தை தவிர்த்து விமான நிலைய ஆணையக ஊழியர்களே கண்காணிப்பு மற்றும் அபராதம் விதிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளனர். விமான பயணிகளுக்கு உதவும் வகையில் தற்போது உள்ள இடத்தில் தேவையான பல்வேறு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. மேலும் விருப்பங்கள் கண்டறிந்து தேவையான வசதிகள் செய்து தரப்படும். பயணிகள் நலனே மிக முக்கியம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
