சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில், சுற்றுச்சூழல் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது.  விழாவில், திருநெல்வேலி எஸ்எஸ் ஆராய்ச்சி அறக்கட்டளையின் ஆராய்ச்சி விஞ்ஞானி  குணசேகரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சுற்றுச்சூழல் மன்றத்தை தொடங்கி வைத்தார்.

விழாவிற்குப் பள்ளிச் செயலர் கவிதாசன் தலைமை தாங்கி பேசுகையில்: நம் பள்ளி வளாகத்தில் மட்டும் 1800க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. இளம் பருவத்தில் மரம் வளர்ப்பு பற்றியும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றியும் அறிந்துகொண்டு, அதற்கேற்றவாறு பள்ளி மாணவ மாணவியர் சுற்றுச்சூழலைக் காப்பதை கடமையாகக் கொள்ள வேண்டும் எனப் பேசினார்.

சிறப்பு விருந்தினர் கூறுகையில்: நம் முன்னோர் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ்ந்தனர்.  மரங்களை வழிபாட்டுத் தலங்களில் வளர்த்தனர். இன்றும் ஒவ்வொரு கோயில்களிலும் தல விருட்சம் என சொல்லப்படும் மரங்கள் இருப்பதனைக் காணலாம். இம்மரங்கள்  மருத்துவ குணம் உடையனவாக இருக்கின்றன. நோய்களைப் போக்க மருத்துவ குணம் மிக்க மரங்கள் பயன்படுகின்றன. மரங்கள் செழித்தால் தான் காட்டு வளம் பெருகும். காடுகளின் வளம் தான், நமது நாட்டின் வளம் என பேசினார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மாணவ மாணவியர், ஆசிரியர்கள், பள்ளி வளாகத்தில் மரங்களை நட்டு வைத்தனர். இந்த விழாவில் பள்ளியின் முதல்வர் உமாமகேஷ்வரி, துணை முதல்வர் சக்திவேல், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.