கோடை காலத்தை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகத்தின் செய்திக்குறிப்பில், மே 4ம் தேதி முதல் ஜூன் 8ம் தேதி வரை (திங்கள் கிழமைகளில்), மங்களூரு சென்ட்ரல் நிலையத்தில் இருந்து, மங்களூரு-சென்னை ரயில் (எண்: 06126) மாலை 4 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10.55 மணிக்கு சென்னை எழும்பூர் நிலையத்தை வந்தடையும்.

மறுமார்க்கமாக, மே 5ம் தேதி முதல் ஜூன் 9ம் தேதி வரை (செவ்வாய்க் கிழமைகளில்) சென்னை எழும்பூரில் இருந்து, சென்னை-மங்களூர் சிறப்பு ரயில் (எண்: 06125) பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7 மணிக்கு மங்களூரு நிலையம் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில் காசா்கோடு, பையனூர், கண்ணூர், தலச்சேரி, வடகரை, கோழிக்கோடு, திரூர், ஷொரணூர், பாலக்காடு, போத்தனூார், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், பெரம்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.