பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு 90 % நிலம் கையகப்படுத்தப்பட்டதாக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறிய தகவல் முற்றிலும் தவறானது என  பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுத் தலைவர் சுப்ரமணியன் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த விமான நிலைய திட்டம் பரந்தூரில் செயல்படுத்தப்படாது என அறிவிப்பை முதலமைச்சர் ஜோசப் விஜய்  வெளியிட்ட நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் பரந்தூர் விவசாயிகள் முதலமைச்சரை சந்தித்து நன்றி தெரிவிக்க வந்தபோது, சுப்ரமணியன் இவ்வாறு தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் சென்னை காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிதாக விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த திட்டம் அங்கு செயல்படுத்தப்பட்டால், விவசாயத்திற்கு உகந்த நிலங்கள் பாதிக்கப்படும் எனக்கூறி இந்த திட்டத்திற்கு அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இயற்கை ஆர்வலர்கள் தரப்பிலும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அங்கு விமான நிலையத்தை கொண்டுவந்தே ஆகவேண்டும் என திமுக அரசு உறுதியாக இருந்தது.

சிலர், திமுக தலைமைக்கும், அரசு உயர் அதிகாரிகள்  திட்டத்தில் லாபம் உள்ளது, விமான நிலையத்தின் அருகே இவர்கள் நிலங்களை வாங்கி குவித்துள்ளனர் என குற்றச்சாட்டுகளையும் எழுப்பினர். கடந்த திமுக ஆட்சியில் உச்சகட்ட அரசு பொறுப்பில் இருந்த பலரும் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு சாதகமான நகர்வுகளை செய்துள்ளனர் எனவும் குற்றச்சாட்டுகளை கூறினர்.

இதற்கு நடுவே, விவசாயம் பெருமளவில் இந்த திட்டத்தால் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது, எனவே இந்த திட்டத்தை எதிர்ப்போம் எனும் பரந்தூர் மக்களின் முடிவுக்கு ஆதரவாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இத்திட்டத்திற்கு தேவையான சட்டரீதியான ஆதரவை வழங்கினார்.

2026 சட்டமன்ற  தேர்தலில் வரலாற்று சாதனை செய்து விஜய் ஆட்சி அமைத்தார். ஆட்சி அமைத்த பின்னர் பரந்தூர் தொடர்பாக என்னசெய்யபோகிறார்  முதலமைச்சர் விஜய் எனும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் நேற்று இந்த திட்டம் இந்த அரசால் கைவிடப்படுவதாக அறிவித்தார். இதற்கு மக்களின் ஆதரவு குவிந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பரந்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள விவசாயிகள் முதலமைச்சர் விஜயைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். மேலும், முதலமைச்சருக்கு நெற்கதிர்களையும், குலதெய்வ புகைப்படத்தையும் கொடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்ட எதிர்ப்புப் போராட்டக் குழுத் தலைவர் சுப்ரமணியன், இந்தப் பகுதியில் விமான நிலையம் அமைப்பதற்கான புவியியல் அமைப்பும், சாத்தியக்கூறுகளும் இல்லை என்பதை பல்வேறு ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் திமுக அரசிடம் தொடர்ந்து எடுத்துரைத்தை குறிப்பிட்டார்.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும். நஞ்சை, புஞ்சை உள்ளிட்ட விவசாய நிலங்கள் அழியும் அபாயமும் ஏற்பட்டிருக்கும் என கூறிய அவர், இந்த திட்டத்தை ரத்து செய்து வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக முதல்வருக்கு விவசாயிகள் சார்பில் நன்றியைத் தெரிவிப்பதாக கூறினார்.

திட்டத்திற்கு 90 % நிலம் கையகப்படுத்தப்பட்டதாக தங்கம் தென்னரசு கூறிய நிலையில், அந்தத் தகவல் முற்றிலும் தவறானது. மொத்தம் 5,740 ஏக்கர் நிலம் திட்டத்துக்குத் தேவையானதாகக் கூறப்பட்ட நிலையில், சுமார் 1,700 ஏக்கர் நிலம் என்பது 90 %ஆகாது. எனவே, நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள தகவல்கள் உண்மைக்கு மாறானவை எனவும் அவர் கூறினார்.