மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசும், தமிழகத்தில் ஆளும் த.வெ.க அரசும் மக்கள் விரோதமாக செயல்படுகிறது என குற்றம் சாட்டி, திமுகவின் தொழிலாளர் அணியாகச் செயல்படும் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் (தொ.மு.ச) மற்றும் அதன் இணைப்பு சங்கங்கள் சார்பில் செவ்வாய்க்கிழமை கோவையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு தொ.மு.ச கவுன்சில் செயலாளர் சிடிசி துரைசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் ஒன்றிய அரசு தொழிலாளர் விரோத 4 தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வேண்டும், மின்சார சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும், மாநில உரிமைகளை பறிக்கக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.
மேலும், மாநில அரசு தூத்துக்குடி அனல் மின் நிலையம் விரிவாக்கத்தை தனியாருக்கு தாரைவாக்க கூடாது கோவை-அரியலூர்-விருதுநகர் மின் பாதைகளை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
2026-27 பட்ஜெட்டில் தமிழக அரசு கூறியது என்ன?
2035-36 ஆண்டுக்குள் தமிழகத்தின் அதிகபட்ச மின் தேவையின் அளவு 37,000 மெகா வாட்டை கடக்கும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. எனவே மாநிலத்தின் மின் வினியோக கட்டமைப்பை வலுப்படுத்தக்கூடிய திட்டமான கோயம்புத்தூர்-அரியலூர் 765 கிலோ வாட் மின் பகிர்மான பாதை திட்டம் ரூ.4000 கோடி செலவில் அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் செயல்படுத்தப்படும் என அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் தென் மண்டலத்திலிருந்து பசுமை எரிசக்தியை கொண்டு செல்வதற்கு மிக முக்கியமாக விளங்கும் ரூ.1187 கோடி மதிப்பிலான பசுமை எரிசக்தி வழித்தடத்தில் இரண்டாம் கட்டம் மற்றும் ரூ. 1640 கோடி மதிப்பிலான விருதுநகர்-கோயம்புத்தூர் 765 கிலோ வாட் மின் பகிர்மான திட்டங்கள் செயல்பாட்டை அரசு வேகப்படுத்தும் என அறிவித்தது.

