திமுக 2.0 ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் 1 லட்சம் கோடியில் கோவை மாவட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும் என கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
காந்திபுரம் பகுதியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ரூ.1 லட்சம் கோடியில் கோவை மாவட்டத்திற்கு அடுத்த 5 ஆண்டுகளில் செய்யவுள்ள பணிகள் குறித்த வரைவு திட்டத்தை வெளியிட்டு செந்தில்பாலாஜி பேசியதாவது:
திமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன் பல்வேறு திட்டங்களை கோவை மாவட்டத்திற்கு செயல்படுத்தவுள்ளோம். ரூ.50,000 கோடியில் தொழில்துறையின் வளர்ச்சி, விரிவாக்கம், புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி வேலைவாய்ப்பு வழங்கப்படும். ரூ.50,000 கோடியில் மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, நகராட்சிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

ஜவுளித்துறையில் புதிய முதலீடுகள், சிறு, குறு தொழில்துறையை மேம்படுத்த உற்பத்தி பொருட்கள் தயாரிப்பு திட்டம், தகவல் தொழில்நுட்ப தலைநகராக மாற்ற முயற்சி ஆகியவை பரிசீலனையில் உள்ளன. அடுத்த 10 வருடங்களில் கோவையை தமிழகத்தில் முதலிடத்திற்கு மேம்படுத்த திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. கோவையில் உள்நாட்டு உற்பத்தியை 15 சதவிதமாக பெருக்கத் திட்டமிடப்படும்.
கேரள அரசுடன், ஆழியாறு – நல்லாறு திட்டத்தைச் செயல்படுத்த பேச்சுவார்த்தை நடத்தப்படும், ஒருங்கிணைந்த புறநகர் பேருந்து நிலையம் அமைக்க முயற்சி எடுக்கப்படும். கோவை மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்படுவதுடன், கிழக்கு புறவழிசாலைப்பணிகளை விரைந்து முடித்தல் உள்ளிட்ட 26 திட்டங்கள் செயல்படுத்தப்படும். மேலும் வெள்ளலூர் குப்பைக்கிடங்கு தொடர்பாக அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறினார்.
தேர்தலை சுமுகமாக நடத்த வேண்டும் என விரும்புகிறோம். தோல்வி பயத்தால் அதிமுகவினர் வன்முறையைத் தூண்ட பிரச்னைகளை உருவாக்குகின்றனர். தெற்கு தொகுதியில் தோல்வியை உணர்ந்த அதிமுக வேட்பாளர் குறைகளை கூறுகிறார். அதிமுகவினர் கொடுத்ததை சொன்னால் அது அரசியல் நாகரீகமாக இருக்காது.
ஓட்டுக்கு பணம் கொடுப்பதை நான் ஏற்க மாட்டேன். தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. தேர்தலுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் தவறு. தெற்கு தொகுதியில் திமுகவினர் பணம் வழங்கியதாக கூறுவதை மறுக்கிறேன். பணம் கொடுப்பதாக ஆதாரங்கள் இருந்தால் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
