கோவையை சேர்ந்த 19 வயது இளம் மாணவி அனு கீர்த்தனா. இவர் கோவைப்புதூரைச் சேர்ந்த சிஐடியு டாஸ்மாக் ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளரும், சிபிஎம் மேற்கு நகரக்குழு உறுப்பினருமான செந்தில் பிரபுவின் மகள்.
சிறு வயது முதலே மருத்துவராகி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற லட்சியத்தோடு படித்து வந்தவர். இதற்கு முன் எழுதிய நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, இவருக்கு பி.டி.எஸ் (பல் மருத்துவம்) படிப்பிற்கான வாய்ப்பு கிடைத்தது. எனினும், எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டும் என்ற ஒற்றை இலக்கோடு மீண்டும் தீவிரமாகப் படித்தார்.
கடந்த மே 3 அன்று இவர் எழுதிய நீட் தேர்வை, வடமாநிலங்களில் நடந்த வினாத்தாள் கசிவு மற்றும் மோசடியால் ஒன்றிய அரசு திடீரென ரத்து செய்தது. மீண்டும் ஜூன் 21 அன்று மறுதேர்வு என அறிவிக்கப்பட்டதால், அனு கீர்த்தனா கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானார். அதன் விளைவாக அவர் தனது உயிரை மாய்த்துக்கொண்டார்.
அனு கீர்த்தனா குடும்பத்தினருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.கோவை புதூரில் உள்ள செந்தில் பிரபு வீட்டிற்கு சென்று அனு கீர்த்தனா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தி அவரின் குடும்பத்தினருக்கு சண்முகம் ஆறுதல் கூறினார்.
