புதுதில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்வித்தலைமை மற்றும் திறன் மேம்பாட்டு மாநாட்டில், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி முன்னெடுத்த, தொழில்துறைக்கும் கல்விக்குமான இடைவெளியைக் குறைக்கும் தொடர் முயற்சிகளைப் பாராட்டி விருது வழங்கப்பட்டது.

இந்த மாநாட்டில் தேசிய அளவில் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் கல்வியாளர்கள், கல்வி நிறுவனத் தலைவர்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில், தொழில்துறையினருடன் இணைந்து பாடத்திட்ட வடிவமைப்பு, பயிற்சிகள், வல்லுனர்களின் வழிகாட்டுதல், தொழிற்சாலைகளை நேரில் பார்வையிடல், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், வேலைவாய்ப்புக்கான தனிப்பட்ட பயிற்சிகள் போன்றவை மாணவிகளுக்கு முதலாண்டிலிருந்தே படிப்படியாகத் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன.

இதுவரை சுமார் 2,000 மாணவிகள் கோடைகாலப் பயிற்சிகள், முழுநேரம், பகுதிநேரம் மற்றும் ஆன்லைன் இன்டர்ன்ஷிப் பயிற்சிகளில் பங்கேற்றுத் தொழில் அனுபவம் பெற்றுள்ளனர். இக்கல்லூரி, தொழில்துறைக்கும் கல்விக்குமான இடைவெளியைக் குறைத்துள்ளதோடு பெண்களுக்கான தொழில் சார்ந்த உயர்கல்வி மையமாகச் சிறந்து விளங்குவதைப் பாராட்டி, தேசிய அளவில் தொழில்துறைக்கும் கல்விக்குமான பாலமாகத் திகழும் சிறந்த கல்வி நிறுவனம் என்ற விருது வழங்கப்பட்டது.

விருது பெற்ற கல்லூரி முதல்வர் சித்ரா பேசியபோது, வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற மாநாட்டில் எங்கள் கல்லூரிக்கு விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் ராமகிருஷ்ணன் வழிகாட்டுதலுடன் நாட்டின் எதிர்காலமான மாணவிகளை சிந்தனைத்தெளிவும் செயலாற்றலும் கொண்டவர்களாக உருவாக்குவதில் பெருமையடைகிறோம் என்றார்.