கோவை காந்திபுரத்தில் உள்ள மத்திய சிறைச்சாலை மைதானத்தில் முதல் கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208.50 கோடி செலவில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இயற்கை பசுமை சுற்றுலா தலமாக உருவாக்கப்பட்டுள்ள பூங்காவில் அரிய வகை தாவரங்கள், செடி, கொடிகள், மர வகைகள் உள்ளன. பூங்காவை சுற்றிலும் 2.2 கி.மீ., துாரத்துக்கு நடைபயிற்சி செல்லும் வகையில், சுற்றுப்பாதை உள்ளது. செம்மொழி பூங்காவிற்கு மக்களிடம் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. விடுமுறை நாட்களில் ஏராளமான பொதுமக்கள் இங்கு வருகின்றனர்.
கடந்த 2021ம் ஆண்டில் கோவையில் செம்மொழி பூங்கா இரண்டு கட்டமாக அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மொத்தமுள்ள 165 ஏக்கர் பரப்பளவில் முதல்கட்டமாக 45 ஏக்கரில் பணிகள் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உள்ளது.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக செம்மொழி பூங்காவை மேலும் 110 ஏக்கர் பரப்பளவில் விரிவுபடுத்த கோவை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக தனியார் ஆலோசனை நிறுவனம் மூலம் விரிவான மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தற்போது மீதமுள்ள 110 ஏக்கர் நிலப்பரப்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பல்வேறு புதிய வசதிகள் உருவாக்கப்பட உள்ளன. குறிப்பாக, குழந்தைகளை கவரும் வகையில் தீம் பார்க் அமைப்பது, தனியார் நிறுவனங்கள் பொருட்காட்சிகள் மற்றும் வர்த்தக நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான இடவசதிகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட திட்டங்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செம்மொழி பூங்கா விரிவாக்கப் பணிக்காக சுமார் ரூ.450 கோடி செலவாகும் என உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
